Crime: சொத்து பிரச்னையால் அண்ணனே தம்பியை தீ வைத்து கொன்ற கொடூரம் - நெல்லையில் பயங்கரம்
தனது தாயை அடித்த குபேந்திரன் தனது தம்பி வானமாமலை தனியாக தூங்கி கொண்டிருந்த போது அவர் மீது தின்னரை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் வானமாமலை என்ற கட்ட வானமாமலை (30). கூலி தொழிலாளியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் இரவு தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் மது அருந்தி போதையில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போட்டு கொண்டே அலறி அடித்து ஓடியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நாங்குநேரி காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வானமாமலை உடலில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர் என விசாரித்து வந்தனர். அதில் வானமாமலை மற்றும் அவரது அண்ணன் குபேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் தனது தாயை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக இருவரும் அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தனது தாயை அடித்த குபேந்திரன் தனது தம்பி வானமாமலை தனியாக தூங்கி கொண்டிருந்த போது அவர் மீது தின்னரை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குபேந்திரனை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வானமாமலை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து குபேந்திரன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். நெல்லையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணனே தனது உடன் பிறந்த தம்பியை எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.