நெல்லையில் இளம்பெண் கொலை விவகாரம்; சிறுவன் கைது - காரணம் என்ன??
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை சிறுவன் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திருப்பணிகரைசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா(18). இவர் நெல்லை டவுண் கீழ ரத வீதியில் உள்ள ராஜம் டாய்ஸ் அண்ட் ஃபேன்சி என்ற கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை காந்திமதி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்ற நிலையில் அங்கு படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக நெல்லை டவுண் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக சந்தியாவின் உறவினர்கள், வேலை பார்க்கும் ஊழியர்கள் என அனைவரிடமும் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் சந்தியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது, சந்தியா வேலை செய்யும் குடோனுக்கு அருகில் உள்ள பேன்சி கடையில் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கும் சந்தியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போன் மூலம் இருவரும் பேசி வந்தது இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது.
இதனை சந்தியா வீட்டில் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சந்தியா அந்த சிறுவனிடம் பேசுவதை படிப்படியாக நிறுத்தியுள்ளார். இதனால் மன வேதனையடைந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார். தொடர்ந்து சிறுவன் சந்தியாவிடம் பேச முயற்சித்துள்ளார். அப்போது சந்தியா என்னிடம் பேச வேண்டாம், பார்க்க வர வேண்டாம் என கூறியதோடு அவரது நம்பரையும் பிளாக் செய்ததாக தெரிகிறது. இதனிடையே அந்த சிறுவன் சந்தியாவின் சகோதரியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அவரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று சந்தியா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்று தன்னை காதலிக்க வேண்டும், மீண்டும் எப்போதும் போல் பேசி பழக வேண்டும் என்று கூறி பிரச்சினை செய்துள்ளார். இதனை சந்தியா மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென சந்தியாவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டவுண் உதவி கமிஷனர் சுப்பையா, இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி உட்பட 3 பேர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்தவரை தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின் நேற்று இரவு அந்த சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சந்தியாவின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரியும், இழப்பீடு தொகை வழங்கக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் போராட்டத்தை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது. காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை சிறுவன் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.