நெல்லையில் சோகம்: மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; மூதாட்டி ஒருவர் படுகாயம்!
நெல்லை மேலப்பாளையத்தில் வயல் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை பெய்தது, இதனால் விவசாயிகள் வயல் நடவு பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர். நெல்லை மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பாலேஸ்வரி, முத்துமாரி மற்றும் 60 வயது மூதாட்டி வள்ளியம்மாள் ஆகிய மூன்று பேரும் மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வயல் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலையில் நெல்லையில் இடிமின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் வயல்வெளியில் பணியில் இருந்த மூவரும் அருகில் ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது பயங்கர இடி சத்தத்துடன் மின்னல் தாக்கி உள்ளது,
இதில் பாலேஸ்வரி, முத்துமாரி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மூதாட்டி வள்ளியம்மாள் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலப்பாளையம் போலீசார் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இடி, மின்னல் தாக்கி இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது, இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, பின்னர் கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் மழை ஓய்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நெல்லை மாநகரில் பல இடங்களில் மாலை திடீரென கனமழை பெய்தது,
குறிப்பாக நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, பெருமாள்புரம், டவுண், பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மாவட்டப் பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓட்டியது, மேலும் தொடர்மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்