வேளாங்கண்ணியில், கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், தற்கொலைக்கு முயன்றாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான 1000 கால் மண்டபவம் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி அருகில் உள்ள ஒரு கழிவறையில் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த கழிவறையில் ரத்தத்தால் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டு இருந்தது. அந்த நம்பரில் காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர் விசாரணையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்தவர் கோவை குனியமுத்தூர் பிரின்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்த முகைதீன்(வயது 56) என்பதும், அவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் அவர் கழிவறை சுவரில் ரத்தத்தால் 'ஐ லவ் யூ குலு' என தனது பேரனின் பெயரை எழுதி வைத்து இருந்தார். தற்கொலைக்கு முயன்றாரா? இது குறித்து வேளாங்கண்ணி போலீசார், முகைதீன் தற்கொலை செய்து கொள்வதற்காக தனது கழுத்தை அறுத்துக்கொண்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)