சீர்காழி அரசு மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு! தேடுதல் வேட்டையில் போலிஸ்
சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து மல்டி பேரா மானிட்டர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து மல்டி பேரா மானிட்டர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி தாலுக்காக்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவீன கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் தீவிர நோயாளிகளின் இதயத்துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த ஓட்டம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும் மல்டி பேரா மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பேரா மானிட்டரின் மதிப்பு தலா 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 மல்டி பேரா மானிடர்கள் திடீரென மாயமாகியுள்ளது. நேற்று பணிக்கு வந்த செவிலியர் கண்காணிப்பாளர் மல்டி பேரா மானிட்டர்கள் மாயமானது குறித்து தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டம், பாதுகாப்பு மிக்க சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கருவி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே சீர்காழி முழுவதும் ஏராளமான திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுநாள் வரை ஒரு திருடர்கள் கூட பிடிபடவில்லை என்பதால் சீர்காழி பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நாள்தோறும் இருந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதே மாவட்டத்தில் மயிலாடுதுறை துறையில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதும் அந்த திருட்டு சம்பவங்களை தொடர்புடையவர்களை மயிலாடுதுறை தனிப்பட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்து பொருட்களை மீட்பதும் நடைபெறும் நிலையில் சீர்காழியில் மட்டும் திருட்டை தடுக்கவும் முடியாமல், திருடர்களையும் பிடிக்கமுடியாமல் காவல்துறையினர் இருந்து வருவது சீர்காழி காவல்துறையினர் குறித்து பொதுமக்களிடையே ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.