குழந்தைகளுக்காக வாங்கிய பிரேக்ஃபாஸ்ட் பாக்ஸில் போதைப் பொருள் - பதறிய பெற்றோர்!
ஏதோ பேக்கிங்கில் பிரச்னை போல என யோசித்து பொட்டியைக் கவிழ்த்துள்ளார். அதிலிருந்து பெரியதாக ஒரு பொட்டலம் விழுந்துள்ளது.
தனது பிள்ளையின் பிரேக்ஃபாஸ்ட் பாக்ஸில் போதைப் பொருள் இருந்ததைப் பார்த்துப் பதறிப் போய் உள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தாய் ஒருவர்.
25 வயதான ஹைசம் நசீர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே ஹைசம் தனது பிள்ளைகளுக்கு பள்ளிக்கான காலை ப்ரேக்பாஸ்ட்டுக்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கார்ன் ப்ளேக்ஸ், சீரல் போன்ற இன்ஸ்டேண்ட் உணவுகளை வாங்கியுள்ளார். அப்படி வாங்கப்பட்ட நெஸ்ட்லே சீரல் பிரேக்ஃபாஸ்ட் பாக்ஸில்தான் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாகவே சீரல் பாக்ஸில் கார்ன் ப்ளேக்ஸ் போன்றவை மிக இலகுவாகவே பேக் செய்யப்பட்டிருக்கும். ஆனால் ஹைசம் தனது பிள்ளைகளுக்காக வாங்கிய அந்தப் பொட்டி அப்படியில்லை. ஏதோ பேக்கிங்கில் பிரச்னை போல என யோசித்து பொட்டியைக் கவிழ்த்துள்ளார். அதிலிருந்து பெரியதாக ஒரு பொட்டலம் விழுந்துள்ளது. அதிர்ந்துபோன ஹைசம் பொட்டலத்தைத் திறந்து பார்த்துள்ளார். அது கிரிஸ்டல் மெத் எனப்படும் தடைசெய்யப்பட்ட ஆபத்தான போதைப்பொருள் எனத் தெரிய வந்துள்ளது. சுமார் 450 கிராம் எடையுடைய இந்த மெத் போதைப்பொருளை பிறகு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் அவர். இவை பலகோடிகள் பெருமானம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இதுகுறித்து பேசியுள்ள நசீம், “அது நான் தினமும் பிள்ளைகளுக்கு பிரேக்பாஸ்ட் செய்து தருவதற்காக வாங்கும் பெட்டி.அதில் போதைப்பொருள் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. நினைத்துப் பாருங்கள் முதல்நாள்தான் அதே பொட்டியில் இருந்து என் பிள்ளைகளுக்கான பிரேக்ஃபாஸ்ட் செய்து கொடுத்தேன். ஒருவேளை என்னை போலீசார் தவறாகப் புரிந்துகொண்டு கைது செய்திருந்தால் என் நிலை என்ன? என் பிள்ளைகளுடைய நிலை என்ன? ஒரே நிமிடத்தில் அத்தனையும் தலைகீழாகியிருக்கும். நல்லவேளை அவர்கள் என்னைப் பாதுகாப்பாக உணர வைத்தார்கள்’ என்றார்.
நெஸ்ட்லே சீரல் பாக்கில்தான் இந்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நைஜீரியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாக்கெட். இதுகுறித்துக் கருத்துக் கூறியுள்ள நெஸ்ட்லே நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், “நிறுவனத்தில் பாக்கிங் செய்யப்பட்ட போது பாதுகாப்பான முறையில்தான் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாக்கெட்டின் சீரியல் நம்பரைக் கொண்டு அதனைக் கண்காணித்தோம். சந்தேகப்படும்படி எதுவும் ஃபேக்ட்ரியில் நிகழவில்லை. ஃபேக்டரிக்கு வெளியேதான் எப்படியோ பெட்டியின் கீழ் வழியாக ஓட்டை போடப்பட்டு மெத் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெற்றோர் சந்தித்த உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்கும்” என அவர் தனது செய்தியில் பகிர்ந்துள்ளார்.