காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறையில் காவல்துறையினர் தன்மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருகும் கஞ்சா புழக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் கடந்த சில மாதங்களாக கஞ்சா பழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளனர். மேலும் இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கட்டுப்படுத்த வில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பரவலாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
காவல்துறையினர் நடவடிக்கைகள்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அடுத்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிக்கவும், அவர்களிடம் சோதனையும் செய்து வருகின்றனர்.
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
இளைஞர் தற்கொலை முயற்சி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் 23 வயதான தீபக். சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தையின் மீன் கடையில் தனது தந்தைக்கு உதவியாக மீன் வெட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் வழக்கம்போல தனது தந்தையின் கடையில் மீன் வெட்டி கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீஸ் ராமமூர்த்தி கடையில் கஞ்சா வைத்திருப்பதாக கூறி ஆய்வு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இளைஞரின் குற்றச்சாட்டு
இதுகுறித்து தீபக் கூறுகையில், தனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், தான் கஞ்சா விற்பனை செய்வது கிடையாது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மயிலாடுதுறை காவல்துறையினர் தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமர்த்தி அவர்களாக கஞ்சாவை எடுத்துவந்து நான் வைத்திருத்தாக கூறி வழக்கு போடுவதும், என்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் தனது தந்தையின் கடையில் வியாபாரம் பாதித்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மயிலாடுதுறையில் காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதை ஊசியை விற்று இலட்சக்கணக்கில் பணம் பார்த்த கும்பல்..! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.