"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் RTE திட்டத்தில் சேர்ந்த மாணவர்களிடம் விதிகளை மீறி கல்வி கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் விதிகளை மீறி கட்டணம் கேட்டு வற்புறுத்துவதோடு, அரசாங்க விதிமுறைகளை மதிக்க முடியாது என பள்ளி முதல்வர் கராராகப் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தை காற்றில் பறக்கவிடும் பள்ளி நிர்வாகம்
இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் 'இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE 2009)' கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, அனைத்துத் தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்று, தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகப் பணத்தை வரவு வைக்கிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் (லைன்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன்) பள்ளியில், இந்த RTE திட்டத்தின் கீழ் பல ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டும் ஏமாற்றம்; இந்த ஆண்டும் கட்டாய வசூல்!
சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கடந்த ஆண்டு தனது மகளை இச்சட்டத்தின் கீழ் மேற்கண்ட தனியார் பள்ளியில் எல்.கே.ஜி (LKG) வகுப்பில் சேர்த்துள்ளார். மாணவர் சேர்க்கையின் போது, பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு சங்கரை வற்புறுத்தியுள்ளது.
அப்போது, "தற்போது பணத்தைக் கட்டிவிடுங்கள், அரசாங்கத்திடம் இருந்து RTE தொகை வந்தவுடன் அந்தப் பணம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் அல்லது அடுத்த ஆண்டு கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்" என பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனை நம்பி, சங்கரும் தனது மகளின் கல்விக்காகக் கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
தற்போது நடப்பு கல்வி ஆண்டில், அவரது மகள் யு.கே.ஜி (UKG) வகுப்பிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் சங்கர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று, "கடந்த ஆண்டு அரசு தரப்பில் இருந்து வர வேண்டிய RTE தொகையைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள விவரங்களைக் கூறுங்கள்" எனக் கேட்டுள்ளார். அதற்குப் பள்ளி நிர்வாகம், "அரசாங்கத்திடம் இருந்து கடந்த ஆண்டுக்கான எந்தத் தொகையும் வரவில்லை. எனவே, இந்த ஆண்டும் நீங்கள் முழுப் பணத்தையும் கட்டித்தான் ஆக வேண்டும். இல்லையெனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்" எனத் திட்டவட்டமாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.
"அரசு விதியைப் பின்பற்ற முடியாது" - பெற்றோரை மிரட்டும் பள்ளி முதல்வர்
RTE சட்டம் குறித்த முழு விவரம் அறியாத பெற்றோர் சங்கர், இது குறித்துத் தனது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் சென்று பள்ளியின் முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியரிடம் எந்தவொரு கல்வி கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் நீங்கள் ஏன் பணம் கேட்கிறீர்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதில் அளித்த பள்ளி முதல்வர், மிகவும் அலட்சியமாகவும், கராராகவும் பேசியுள்ளார். அவர் கூறுகையில்:
"எங்கள் பள்ளி மேனேஜ்மென்ட் (நிர்வாகம்) என்ன சொல்கிறதோ, அதை மட்டும்தான் எங்களால் செயல்படுத்த முடியும். அரசாங்கம் இன்னும் எங்களுக்குப் பணம் அனுப்பவில்லை. அரசு கூறும் எல்லா விதிமுறைகளையும் நாங்கள் அப்படியே பின்பற்றினால், எங்களால் பள்ளியை நடத்தவே முடியாது. மேனேஜ்மென்ட் உத்தரவுப்படி பணத்தைக் கட்டினால் மட்டுமே குழந்தையைச் சேர்க்க முடியும்."
என பெற்றோர்களிடம் பள்ளி முதல்வர் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். பெற்றோர்கள் நியாயம் கேட்டும், எவ்விதப் பரிவுமின்றி சட்டத்திற்குப் புறம்பாகப் பள்ளி முதல்வர் பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
பள்ளி முதல்வரிடம் பெற்றோர் நியாயம் கேட்கும் போது, அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் இந்த வாக்குவாதத்தைப் படம்பிடித்துள்ளனர். பள்ளி முதல்வர், அரசாங்க விதிகளுக்கு எதிராகவும், ஏழைப் பெற்றோரை மிரட்டும் தொனியிலும் பேசும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பலரும் இப்பள்ளியின் போக்கிற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
பாதிக்கப்படும் கிராமப்புற ஏழைகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அரசாங்கம் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இத்தகைய நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், சில தனியார் பள்ளிகளின் மெத்தனப் போக்காலும், பண ஆசையாலும் இத்திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறுகையில், "இப்பள்ளியில் எனது குழந்தைக்கு மட்டுமன்றி, RTE திட்டத்தின் கீழ் படிக்கும் பல மாணவர்களின் பெற்றோர்களிடமும் இதே போன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்டணக் கொள்ளை நடத்தப்படுகிறது. ஏழை என்பதால் எங்களை மதிக்காமல் பேசுகிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி இதனால் கேள்விக்குறியாகியுள்ளது" என வேதனை தெரிவித்தனர்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, விதிகளை மீறி செயல்படும் இந்தத் தனியார் பள்ளி மீது கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வசூலிக்கப்பட்ட கட்டணத்தை உடனடியாகப் பெற்றோர்களுக்குத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
ட்ரெண்டிங் செய்திகள்






















