மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
"மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 கிலோ கஞ்சா கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் காவல்துறையின் 3 நாள் தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களைக் கடத்தி வந்த ஐந்து பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய தகவலால் சிக்கிய கும்பல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) Dr. B. சினேஹா ப்ரியா, உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் தாலுக்கா காவல் நிலையங்களின் சார்பில் சிறப்பு அதிரடி வேட்டைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 06.07.2026 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. நான்கு சக்கர வாகனத்தில் பெருமளவிலான கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனைக்காகக் கடத்தி வரப்படுவதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த வாகனத்தை மறித்துச் சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட கணபதி, ராஜமாணிக்கம், பாலசுந்தரம், விக்னேஷ், தங்கபாண்டி ஆகிய 5 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மதிப்புமிக்க போதைப்பொருட்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட இந்த 5 எதிரிகளிடமிருந்து விற்பனைக்காகக் கடத்தி வரப்பட்ட சுமார் 50 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நடப்பாண்டு காவல் துறையின் அதிரடி புள்ளிவிவரங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்கக் காவல் துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் புள்ளிவிவரங்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நடப்பாண்டில் இதுவரை சட்டவிரோத கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது மொத்தம் 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 613 நபர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இதுவரை சுமார் 65.323 கிலோ கஞ்சா மற்றும் 1274.706 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குற்றவாளிகள் கடத்தலுக்குப் பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 முக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டத்தின் (Detention Law) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் கண்காணிப்பாளரின் கடுமையான எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா எச்சரித்துள்ளார். கஞ்சா மற்றும் குட்கா விற்பனையிலும், கடத்தலிலும் ஈடுபடுவோர் மீது சற்றும் தயக்கமின்றி மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அல்லது கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் நடப்பதைக் கண்டால், உடனடியாக "DRUG FREE TN" என்ற பிரத்யேக செயலி (App) மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் மற்றும் ரகசியங்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் துறை உறுதியளித்துள்ளது.
காவல்துறை மீது எழுந்த சந்தேகங்கள்
கடந்த 6-ம் தேதி நடந்த இந்த மதிப்புமிக்க போதைப்பொருட்கள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பத்திரிகையாளர் தகவல்கள் கேட்ட நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் பத்திரிகை செய்தியினை காவல்துறையினர் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு நேர்மையான வழியில் செல்கிறதா.? கூடுதலாக கஞ்சா பிடிபட்ட நிலையில் காவல்துறையினர் குறைத்து 50 கிலோ என கூறுகின்றனரா? அல்லது குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறையினர் முயல்கின்றனரா.. ? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























