சிறுமிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் தொல்லை, கொலை மிரட்டல்.. பாஜக பிரமுகர் போக்சோவில் கைது..!
மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படத்தை காண்பித்து பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் மகன் மகாலிங்கம். 60 வயதான மகாலிங்கம் பாஜக மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொது செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட அதே கிராமத்தை சேர்ந்த 6 சிறுமிகளிடம், தனது உடைகளை களைந்து உடல் உறுப்புகளை காண்பித்தும், செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும், படத்தில் வருவது போன்று தன்னிடம் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என என்று கூறியுள்ளார். இதற்கு சிறுமிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை என்றால் உங்களை கட்டிப்போட்டு வன்கொடுமை செய்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த சிறுமிகள் அந்த காம கொடூரனிடம் இருந்து தப்பி, இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளனர். நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள் மகாலிங்கத்திடம் இவ்வாறு குழந்தைகளிடம் நடந்துகொண்டது குறித்து கேட்டதற்கு, அவர்களை கொலை செய்து விடுவதாகவும், இது குறித்து புகார் அளிக்கக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தை தேடி பிடித்து கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகாலிங்கத்தின் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு சரியான முறையில் இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களை செய்து வருகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குழந்தைகள் பாதிக்கப்படுவது தெரிந்தால், உடனடியாக போலீசாரை அணுகுங்கள். குழந்தைகளிடம் எதையும் திறந்த மனதுடன் பேசவும். கோபப்பட்டால், அவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை உங்களிடம் மறைக்க வாய்ப்புள்ளது