மயிலாடுதுறை: பள்ளி நிர்வாகத்தை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவர்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சங்கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒன்றின் விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் விடுதியில் உள்ள பல மாணவர்களை தன்பாலின ஈர்ப்புக்கு அழைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 18ம் தேதி ஆசிரியர் சீனுவாசனை கைது செய்து சிறையிலடைத்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்பில்லாத நபர்களையும் போக்சோ வழக்கில் சேர்த்து விடுவதாக பள்ளி நிர்வாகத்தினரை காவல் ஆய்வாளர் சங்கீதா மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்த தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சங்கீதா வழக்குகளை உரிய முறையில் விசாரிக்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை மயிலாடுதுறை டிஎஸ்பி பொறுப்பு ராஜ்குமார் காவல் ஆய்வாளர் சங்கீதாவிடம் வழங்கினார். இச்சம்பவம் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக அப்பளியில் அந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும், எனவே, யாரும் சமூக வலைதளங்களில் இப்பள்ளி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகேள் விடுத்தனர்.
தர நிர்ணய சட்ட விதிகளை வியாபாரிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்- மயிலாடுதுறையில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வியாரிகளிடம் வலியுறுத்தல்.
மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசினார். அப்போது, அவர் வியாரிகளிடம் கூறுகையில், கடைகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது, உணவு தரச் சான்று நிறுவன விதிகளை பின்பற்றி உரிமத்தை காலம் தவறாமல் புதுப்பிக்க வேண்டும், தவறினால் அபராதம் செலுத்த நேரிடும்.
விற்பனை செய்யும் பொருள்களில் காலாவதி தேதியின்மேல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் கடமை வியாபாரிகளுக்கு உள்ளது என்றார். இக்கூட்டத்தில், வர்த்தக சங்க நிர்வாகிகள், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.