‛காதலிக்கிறேன்...ஆனா கல்யாணம் பண்ண முடியாது...’ அடம்பிடித்த காதலனை மணமகனாக்கிய போலீசார்!
கடலூரில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய காதலுனுடன், காவல் நிலையத்திலே திருமணம் செய்து வைத்த மகளிர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது புதுமண்டிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் கடந்த பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஓராண்டு காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக கலைச்செல்வி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவலை தனது காதலன் தமிழ்ச்செல்வனிடம் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்ச்செல்வனோ தனது வீட்டில் கர்ப்பமாகிய விஷயம் தெரிந்தால் நிச்சயம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும், கலைச்செல்வியுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால், தொடக்கத்தில் கவலையுற்ற கலைச்செல்வி பின்னர்தான் தமிழ்ச்செல்வன் தன்னை விட்டு நிரந்தரமாக பிரிய முயற்சிப்பதை உணர்ந்துள்ளார்.
உடனடியாக, சுதாரித்துக்கொண்ட கலைச்செல்வி தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய தமிழ்ச்செல்வன் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக, காவல்துறையினர் தமிழ்ச்செல்வனையும், அவரது குடும்பத்தினரையும், கலைச்செல்வி குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலைச்செல்வியை தான் காதலித்ததையும், தன்னால்தான் கர்ப்பமானார் என்பதையும் தமிழ்ச்செல்வன் ஒப்புக்கொண்டார்.
இதனால், கலைச்செல்வியை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழ்ச்செல்வனை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெற்றோர் சம்மதம் இல்லாத காரணத்தால்தான் கலைச்செல்வியை திருமணம் செய்ய முடியவில்லை என்று தமிழ்ச்செல்வன் காரணம் கூறியுள்ளார். கலைச்செல்வியை திருமணம் செய்யாவிட்டால், இளம்பெண்ணை ஏமாற்றியதற்காக கைது செய்ய நேரிடும் என்று போலீசார் தமிழ்ச்செல்வனையும், அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். போலீசாரின் எச்சரிக்கைக்கு பயந்தும், கைது நடவடிக்கைக்கும் பயந்தும் தமிழ்ச்செல்வனுக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால், தமிழ்ச்செல்வன் மட்டும் கலைச்செல்வியை திருமணம் செய்ய இயலாது என்று ஆணவத்துடன் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த போலீசார் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் சிறைக்கு செல்ல தயாராக இரு என்று மீண்டும் எச்சரித்துள்ளனர். இதனால், தமிழ்ச்செல்வன் மிரண்டு போகியுள்ளார். உடனே, கலைச்செல்வியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்று கூறியுள்ளார்.
இதனால், காவல் நிலையத்தின் வளாகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்திலே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பின்னர், மணமகன் தமிழ்ச்செல்வனுக்கும், மணமகள் கலைச்செல்விக்கும் தங்களது சொந்த பணத்தில் உடனே பட்டுச்சட்டை, பட்டு வேஷ்டி, பட்டுப்புடவை வாங்கி கொடுத்து கழுத்தில் மாலையுடன் மணமக்களாக கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு இருவீட்டார் சுற்றி நிற்க, காவல்துறையினர் முன்னிலையில் கலைச்செல்வி கழுத்தில் காதலன் தமிழ்ச்செல்வன் தாலி கட்டினார். திருமணமாகிய மணமக்கள் இருவரையும் நீடுழி வாழ்க என்று காவல்துறையினர் மலர்தூவி வாழ்த்து தெரிவித்தனர். காதலியை ஏமாற்றி கர்ப்பமாக்கினார் என்று வழக்கு பதிவு செய்யாமல், இருவருக்கும் ஆலோசனை அளித்து தங்கள் தலைமையிலே திருமணம் நடத்தி வைத்த மகளிர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களும், உயர் அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.