Crime: காதலிக்காக டாய்லெட்டில் பதுங்கல்.. இதுக்காக இத்தனை மொபைல் திருட்டு.. வசமாய் சிக்கிய தியாகக் காதலன்..
கடை மூடும் நேரம் பார்த்து பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்ட இளைஞர், கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து விலை உயர்ந்த மொபைல் ஃபோன்கள் பக்கம் நோட்டம் விட்டுள்ளார்.
தன் காதலிக்கு செல்போன் பரிசளிக்க விரும்பி கடையில் இருந்து ஏழு காஸ்ட்லி மொபைல் ஃபோன்களை திருடிச்சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
காதலிக்காக மொபைல்ஃபோன் திருட்டு
கர்நாடகா, பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது அப்துல் முனார்ப் என்ற இளைஞரின் காதலிக்கு கடந்த 28ஆம் தேதி பிறந்தநாள். இந்நிலையில் தன் காதலிக்கு காஸ்ட்லி மொபைல் ஃபோன் பரிசாகக் கொடுக்க விரும்பிய இளைஞர் செல்ஃபோன் ஷோரும் ஒன்றில் இருந்து செல்போன் ஒன்றைத் திருடி வர திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி ஜேடிபி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய செல்போன் ஷோரூம் ஒன்றுக்குள் இரவு நுழைந்துள்ளார் முனார்ஃப். அப்போது அந்த ஷோரூம் மூடும் நேரம் என்பதால், கதவுகளை அடைத்து பூட்ட ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் கடையின் பாத்ரூமுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்ட முனார்ஃப், கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து விலைஉயர்ந்த மொபைல் ஃபோன் பக்கம் நோட்டம் விட்டுள்ளார்.
ஒன்றுக்கு ஏழாக...
ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து போன்களுமே அவரைக் கவர்ந்த நிலையில், ஒன்றுக்கு ஏழாய் எடுத்துக் கொள்வோம் என் நொடியில் சிந்தனையை மாற்றி அங்கிருந்த 7 செல்போன்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டுள்ளார். பிறகு மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்ட முனார்ஃப், மறுநாள் காலை வரை அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.
தொடர்ந்து, காலையில் வழக்கம்போல், ஊழியர்கள் கடையை திறந்தபோது, வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியதும் எதுவும் தெரியாதவர் போல் பாத்ரூமில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.
சந்தேகமடைந்த கடை ஊழியர்கள்
ஆனால் அவர் எடுத்துச் சென்ற செல்போன்களில் ஒன்று தரையில் விழுந்து கிடந்த நிலையில், அதை கடை ஊழியர் ஒருவரும் பார்த்து உள்ளார். அப்போதுதான் கடையை திறந்துள்ள நிலையில், கீழே எப்படி செல்போன் விழுந்திருக்கும் என்று கடை ஊழியர் சந்தேகத்துடன் ஆராயந்த நிலையில், மேலும் சில செல்போன்கள் காணாமல் போனது கடைக்காரர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக காவல் துறையினரிடம் புகார் தரப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் செல்போன்களின் ஐஎம்இஐ நம்பரை வைத்து, திருடப்பட்ட செல்போன் இருக்கும் இடம், அப்துல் முனார்ப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிடிஎம் லேஅவுட் பகுதியில் தங்கி உணவகம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
திருடப்பட்ட செல்ஃபோன்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இளைஞர் ஒரு போனை தன்னுடைய உபயோகத்து வைத்துக்கொண்டு பிற போன்களை காதலிக்கு பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்