Crime : "புதையல் எடுக்க உங்க பொண்ண பலி கொடுங்க"... மந்திரவாதியை நம்பி தந்தை செய்த பகீர் காரியம்!
மந்திரவாதியின் பேச்சை நம்பிய எல்லப்பா தன் மூத்த மகளை நரபலி கொடுப்பதற்காக வீட்டுக்கு வெளியில் பெரிய குழி ஒன்றை தோண்டி, நரபலி கொடுத்த பிறகு தன் மகளை அதில் போட்டு புதைக்க திட்டமிட்டிருந்தார்.

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் புதையல் இருந்ததாக நம்பி 18 வயது சிறுமியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மட்னி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் எல்லப்பா. இவருக்கு 18 வயதில் ஒரு மகளும் 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்தநிலையில், மூத்த மகள் தொலைதூரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். சமீபத்தில் இந்த பெண் தனது வீட்டுக்கு வந்த சமயத்தில் எல்லப்பாவிடம் அவரது வீட்டுக்கு அருகில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஆசையை வளர்த்துள்ளார்.
இதையடுத்து, புதையலுக்கு ஆசைப்பட்ட எல்லப்பா மந்திரவாதியின் துணையோடு கடந்த சில நாள்களாக வீட்டின் முன் புறம் மற்றும் பின் புறத்தில் பூஜை செய்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் மந்திரவாதி புதையலை எடுப்பது எளிதான காரியமல்ல. இதற்கு ஒரு உயிர் பலி கேட்கும், இதற்காக நீங்கள் உங்கள் மூத்த மகளை பலி கொடுக்க வேண்டும் என்று எல்லப்பாவிடம் தெரிவித்துள்ளார்.
மந்திரவாதியின் பேச்சை நம்பிய எல்லப்பா தன் மூத்த மகளை நரபலி கொடுப்பதற்காக வீட்டுக்கு வெளியில் பெரிய குழி ஒன்றை தோண்டி, நரபலி கொடுத்த பிறகு தன் மகளை அதில் போட்டு புதைக்க திட்டமிட்டிருந்தார். இதை அறிந்துகொண்ட அவரது 18 வயதான மூத்த மகள் நரபலி குறித்து தனது தோழிக்கு தகவல் கொடுத்தார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தோழி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். விஷயம் தெரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் தந்தை, மந்திரவாதி உட்பட 9 பேரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யவத்மால் எஸ்.பி திலிப் புஜ்பால் கூறுகையில், "நரபலி தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவர் பெண்ணின் தந்தையாவார். அவர் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் அடிப்படையில், 307 (கொலை முயற்சி), 376 (கற்பழிப்பு) மற்றும் IPC இன் பிற தொடர்புடைய விதிகள் மற்றும் பிற செயல்களின் கீழ் ஒரு குற்றம் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது நரபலி முயற்சியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்படி குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















