மனைவி மீது பாலியல் வன்கொடுமை: சிக்கலில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ உமங் சிங்கார் மீது தார் மாவட்டத்தில் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ உமங் சிங்கார் மீது தார் மாவட்டத்தில் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கார் அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்கியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், சட்டப்பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு), மற்றும் 498 ஏ (குடும்ப வன்முறை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கார் தார் பகுதியில் உள்ள கந்த்வானியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தொடக்கத்தில் உமங் சிங்கர் என்னுடன் திருமணத்தை காரணம் காட்டி உடல் ரீதியில் உறவு கொண்டார். பின்னர், திருமணம் செய்ய மறுத்துவிட்டார். பிறகு நான் இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கவும் அவர் என்னை ஏப்ரல் 16 2022 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அவர் என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினார். என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தினார்.என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்கி வந்தார். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் என்னை மிரட்டினார், மேலும் ஆபாசமான வீடியோக்கள் மூலம் என்னை மிரட்டி வந்தார்” என்று ஜபல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான அவரது மனைவி அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
“சிங்கர் 2022 அக்டோபர் 26 அன்று போதையில் என்னைக் கொல்ல முயன்றார், அக்டோபர் 27, 2022 அன்று என்னை மீண்டும் அடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவசர எண்ணை டயல் செய்யும் போது நான் தார் போலீசாரை அழைத்தேன், ஆனால் அவர் அவர்களையும் மிரட்டினார்,” என்று அந்த பெண் கூறினார்.
"அதே நாளில், அவர் எங்கள் வீட்டு உதவியாளரை நான் தாக்கியதாகவும், அவரை மிரட்டுவதாகவும் என் மீது அவரே ஒரு போலி புகார் அளித்தார்," என்று அந்தப் பெண் கூறினார்.
இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
”எனது மனைவி 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி, நான் அவரை அவதூறாகப் பேசுவதாக மிரட்டினார். நவம்பர் 2ம் தேதி நான் அவருக்கு எதிராக புகார் அளித்தேன், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எதிராக எதிர் புகாரை பதிவு செய்தனர், ”என்று சிங்கார் தனது தரப்பில் இதுதொடர்பாகப் புகார் அளித்துள்ளார்.