அரங்கேறிய கொலை: உடலை மாற்றி தகனம் செய்த பெற்றோர்: கேரளாவில் நடந்தது என்ன? அதிர்ச்சி பின்னனி!
கேரளாவில் தங்கள் மகன் என நினைத்து வேறு ஒரு இளைஞரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த பெற்றோர் ஊடக கவனத்திற்கு வந்துள்ளனர்.
கேரளாவில் தங்கள் மகன் என நினைத்து வேறு ஒரு இளைஞரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த பெற்றோர் ஊடக கவனத்திற்கு வந்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தீபக் மற்றும் இர்ஷத். இவர்கள் இருவரும் ஒரு மாத இடைவெளியில் காணாமல் போயினர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி, கோயிலாண்டி கடற்கரையில் அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலத்தை தீபக்கின் குடும்பத்தினரிடம் போலீஸார் காட்டினர். அவர்களும் அது தீபக் தான் என்று அடையாளம் கூறினர். பின்னர் அந்த சடலத்தைப் பெற்றுச் சென்ற தீபக் குடும்பத்தினர் அதற்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்தனர்.
ஆனால் மூன்று வாரங்களுக்குப் பின்னர் குடும்பத்தில் சிலர் சந்தேகம் எழுப்ப டிஎன்ஏ சோதனைக்கு கோரப்பட்டது. இதனையடுத்து டிஎன்ஏ சோதனைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான் அந்த உடல் தீபக் உடையது அல்ல கோழிக்கோட்டைச் சேர்ந்த இர்ஷத் என்பவரின் உடல் என்பது உறுதியானது.
கோழிக்கோட்டின் பந்திக்காராவைச் சேர்ந்தவர் தீபக். இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் இவர் அவ்வப்போது வீட்டிலிருந்து மாயமாகிவிடுவார். அப்படித்தான் அவர் கடந்த ஜூன் 7 ஆம் தேதியும் மாயமாகியுள்ளார். அதனால் குடும்பத்தினர் ஒரு மாதம் கழித்து புகார் அளித்தனர். இந்நிலையில் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் எழுந்த சந்தேகத்தால் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.
இர்ஷத்துக்கு என்ன நேர்ந்தது?
அப்படியென்றால் இர்ஷத் ஏன் இறந்தார் என்ற விசாரணையில் போலீஸ் இறங்கினர். இர்ஷத்தை தங்கக் கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்று கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இர்ஷத் கடந்த மே மாதம் தான் துபாயில் இருந்து வந்துள்ளார். அவரை ஜூலை 2ஆம் வாரத்தில் சிலர் கடத்திச் சென்றனர். ஜூல 22ல் இர்ஷத் வீட்டார் அவரைக் காணவில்லை எனப் போலீஸில் புகார் கொடுத்தனர். இர்ஷத் துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வருவதையே தொழிலாகக் கொண்டிருந்துள்ளார். கடைசியாக அவர் கொண்டு வந்த தங்கத்தை உரிய நபர்களிடம் சேர்க்காமல் அவர் வேறெங்கோ கொடுத்துள்ளார். அதனாலேயே இர்ஷத் கடத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். இர்ஷத் கடத்தல் தொடர்பாக ஜினத் முகமது குட்டி, ஷாஹீல் ஹனீபா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனெனில் இவர்கள் இருவரும் இர்ஷத்தை கடத்தி வைத்துள்ளதாக இர்ஷத்தின் பெற்றோருக்கே ஃபோன் செய்து மிரட்டியுள்ளனர். மேலும் இர்ஷத் தங்கள் கஸ்டடியில் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தான் இர்ஷத் மர்மமான முறையில் இறந்துள்ளார். இர்ஷத் வாகனத்திலிருந்து விழுந்து இறந்ததாக தகவல் உள்ளன. ஆனால், இர்ஷத் வாகனத்தில் இருந்து விழுந்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் தங்கள் மகன் திரும்பிவர ஏதோ ஒரு வாய்ப்பு இருப்பதாக தீபக் குடும்பத்தினர் ஆறுதல் அடைந்துள்ளனர். போலீஸாரிடம் தங்கள் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.