கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
வெள்ளியணை போலீசார் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த மணிமேகலை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கரூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாமக்கல் கோழிப்பண்ணையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எல்லை கடந்து கூலித் தொழிலாளி வீடு புகுந்து அராஜகம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது எஸ்.பி அலுவலகத்தில் பெண்மணி கண்ணீர் மல்க புகார்.
அடிமை போல நடத்திய உரிமையாளர்:
கரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். சின்னச்சாமி உரிய சம்பளம் கொடுக்காமல் சாப்பாடு மட்டும் போட்டு அடிமை போல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வேலை பிடிக்காமல் ஜெகதாபியில் உள்ள அம்மா வீட்டில் மணிமேகலை கணவர் மாரிமுத்து மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
கொடுமைப்படுத்தும் வீடியோ:
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரிமுத்து முட்டை வண்டிக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் மாரிமுத்துவை கட்டி வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ மணிமேகலையின் செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 8 மணி அளவில் முன்னாள் கோழிப்பண்ணை உரிமையாளர் சின்னச்சாமி, அவரது மனைவி கலாராணி, மேலாளர் கிஷோர் மற்றும் அடையாளம் தெரியாத வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என நான்கு பேரும், மாரிமுத்துவை கயிற்றில் கட்டி இழுத்து வந்து மணிமேகலையின் அம்மா வீட்டில் வைத்து அடித்ததோடு, குடும்பத்தோடு எரித்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மணிமேகலை தனது உறவினர்கள் மூலமாக வெள்ளையனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். நடந்த சம்பவங்கள் குறித்து மணிமேகலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்துவதாக கூறி பாதிக்கப்பட்ட மாரிமுத்து மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் கடந்தும் தனது கணவர் மாரிமுத்து மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திரும்ப வரவில்லை என்றும், வெள்ளியணை போலீசார் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த மணிமேகலை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை:
மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காணாமல் போன தனது கணவரை மீட்டு தரக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தனது கணவரை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதும், அம்மா வீட்டில் வைத்து மிரட்டிய வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.