தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரவுடி சடலம் மீட்பு - கரூரில் பயங்கரம்
விசாரணையில் இறந்தவர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் 32 என்றும் அவர் மீது கரூர் மற்றும் வெளி மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்கு சம்பவங்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாதா ஆண் பிணம் கிடப்பதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு சம்பவ இடத்தில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
நாய் நின்ற இடத்தின் அருகே இரு வாய்க்கால்களை இணைப்பதற்கான குமுளி சென்று வருகிறது. இதனால் குமுளியில் அவரின் தலை வீசப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறிய முசிறி தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
விசாரணையில் இறந்தவர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் 32. என்றும் அவர் மீது கரூர் மற்றும் வெளி மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்கு சம்பவங்கள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.