கரூரில் இருசக்கர வாகனத்தால் வந்த வம்பு - இறுதியில் நடந்தது என்ன ?
நாங்கள் அப்படித்தான் சத்தமிடுவோம் என வேப்பங்குடியை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாகவும், அதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் ஒரு இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பாப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்கள் பேக்கரிக்கு முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து, என்ஜினை அதிவேகத்தில் இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது சத்தம் அதிகமாக கேட்டதால், எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று பாப்பனம்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். நாங்கள் அப்படித்தான் சத்தமிடுவோம் என வேப்பங்குடியை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாகவும், அதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்களும், போன் செய்து தங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை பேக்கரிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது வேப்பங்குடியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு வந்து 5 இளைஞர்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு இளைஞரை 5-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காயமாடைந்த பாப்பனம்பட்டியை சேர்ந்த 2 இளைஞர்கள் காணியாளம்பட்டி அரசு மருத்துவமனையிலும், 3 இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய வேப்பங்குடியை சேர்ந்த நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கூறி சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் பாப்பனம்பட்டி கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில் பேக்கரியில் பாப்பனம்பட்டி இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (19), கண்ணன் (18), சந்துரு (23) ஆகிய 3 இளைஞர்கள் மீதும் கொலை முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேக்கரியில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து இரண்டு தரப்பு இளைஞர்களும் சரமரியாக தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.