Crime : பொதுக்கழிப்பறைகளில் பேராசிரியையின் செல்போன் நம்பர்..! 500க்கும் மேற்பட்ட ஆபாச அழைப்பு..! பேராசரியர் கைது..!
கர்நாடகாவில் கல்லூரி பேராசிரியையின் செல்போன் எண்ணை பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளவும் என எழுதி வைத்த சக பேராசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியை ஒருவர் சுமார் 31 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 58 வயதான அவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள மாநில அளவில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அவருக்கு பல்வேறு தெரியாத செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. அவையனைத்தும் ஆபாசமாக பேசியும், பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்தும் வந்துள்ளது. இதனால், அந்த பேராசிரியை அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுமார் 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அந்த பேராசிரியை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பேராசிரியைக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணிற்கு சொந்தமான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர்கள் அனைவரும் பொது கழிப்பிடங்கள் மற்றும் சேதமடைந்த சுவர்களில் இந்த எண் இருந்ததாக கூறியுள்ளனர். மேலும், அந்த பாலியல் உறவுக்கு அந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பேராசிரியையின் எண் எழுதப்பட்டிருந்த சுவர்கள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதி அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பேராசிரியையுடன் பணியாற்றிய சக பேராசிரியரே சுவற்றில் எண்ணை எழுதியதை கண்டுபிடித்தனர்.
சுவற்றில் எழுதிய கல்லூரி பேராசிரியரான பிரதீப் பூஜரி ( வயது 36) அந்த கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், கல்லூரி கரெஸ்பாண்ட்டட் பிரகாஷ் ஷெனாய் ( வயது 44) மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி.எஸ்.ஷெட்டி ( வயது 32) ஆகியோருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை விசாரணையில் கண்டறிந்தனர். அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் மைசூர், மடிகேரி, சிக்கமகளூரூ, முடிகேரி, பெலகனேர், என்.ஆர்.புரா மற்றும் ஷிவமோகா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் சுவர்களில் பேராசிரியையின் மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் எழுதி வைத்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இவர்கள் மூன்று பேரும் பாதிக்கப்பட்ட பேராசிரியைக்கு ஏராளமான கடிதங்களையும், வாழ்த்து அட்டைகளையும் கொடுத்ததுடன் ஆபாசமான மெசேஜ்களையும் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வந்துள்ளனர். 58 வயதான பேராசிரியைக்கு சக பேராசிரியர்கள் மூலமாகவே வித்தியாசமாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்