‛பீரோலு பீரோலு பீரோலு...‛ தங்கம் என நினைத்து ஒரு கிலோ கவரிங்கை அள்ளிச் சென்ற திருடர்கள்!
காலையில் எழுந்து வீட்டை பார்த்த ஷாஜகான் பீவிக்கு என்ன அதிர்ச்சி காத்திருந்ததோ அதே அதிர்ச்சி தான் திருடர்களுக்கும் இருந்திருக்கும்.
வீட்டின் கதவை உடைத்து தங்கம் என நினைத்து கிலோ கணக்கில் கவரிங் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள்
காரைக்குடி தந்தை பெரியார் நகரில் நள்ளிரவில் வீட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த கிலோ கணக்கில் நகைகள் இருந்ததை பார்த்து அவற்றை கொள்ளையடித்து சென்றனர். விசாரனையில கொள்ளை அடித்துச் சென்றது கவரிங் என தெரிய வந்துள்ளது .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் 6வது விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி (54.) இவரது மனைவி ஷாஜகான் பீவி, அவரது பத்து வயது பேத்தியுடன் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார் இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு, முன்பக்க கதவை உடைத்து பெட்ரூமில் தூங்கிய இருவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து விட்டு அங்கு உள்ள பீரோவில் இருந்த ஆறு பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததோடு, தொடர்ந்து மாடிக்கு சென்ற அவர்கள் பீரோ ஒன்றை திறந்து பார்த்துள்ளனர்.
ஒரு கிலோவுக்கும் மேல் நகைகள் இருந்தை பார்த்த மகிழ்ச்சியில், குதூகலம் அடைந்த அவர்கள், சுந்தரபுருஷன் படத்தில் வடிவேலு திருட வரும் வீட்டில் பீரோவை பார்த்த ஆர்ப்பரிக்கும் காட்சியை போல, துள்ளிக்குதித்துள்ளனர். ‛பீரோலு... பீரோலு.... அய்யோ... எல்லாமே தங்கமா இருக்கே...’ என , நைசாக அவற்றை மொத்தமாக எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் அங்கிருந்து புறப்பட்டனர்.
காலையில் எழுந்து பார்த்த ஷாஜகான்பிவிக்கு ஒரே அதிர்ச்சி. வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்ததும், இருந்தவற்றை சுருட்டிச் சென்றதும் தெரியவந்தது. உடனே காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரனையில் ஒரு கிலோவுக்கு மேல் திருடு போனது கவரிங் நகைகள் என தெரியவந்தது. வீடு உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
வீட்டை காலையில் பார்த்த ஷாஜகான் பீவிக்கு என்ன அதிர்ச்சி இருந்ததோ, அதே அதிர்ச்சி தான் கொள்ளை அடித்த நகையை விற்கும் போது கொள்ளையர்களுக்கும் இருக்கும் என்கிற வகையில் போலீசாருக்கு ஒருவகையில் சந்தேகம் என்றாலும், மற்றொரு புறம் அதிகரித்து வரும் தொடர் கொள்ளைக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்கிற வருத்தமும் போலீசாருக்கு இல்லாமல் இல்லை.