பிச்சைக்காரர்கள் உஷார்... கன்னியாகுமரியில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் வீட்டின் கதவை பலமாக தட்டி பிச்சை போடு பிச்சை போடு என கேட்டுள்ளனர் பிச்சை போட்டால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே இளம்பெண் முகத்தில் மயக்க பொடி தூவி 25 பவுன் நகையை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (வயது 29). இவருடைய மனைவி ஸ்ரீஜா ஷாமிலி (26). இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீஷ்குமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் பிரதீஷ்குமாரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை குளச்சல் அருகே உள்ள வைத்தியசாலைக்கு பிரதீஷ்குமார் அழைத்து சென்றார். வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீஜா ஷாமிலி தனது கைக்குழந்தையுடன் தனியாக இருந்தார். இந்த நிலையில் அந்த வீட்டுக்கு 2 ஆணும், ஒரு பெண்ணும் வந்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த அவர்கள், ஏதாவது பிச்சை போடுமா? என ஸ்ரீஜா ஷாமிலியிடம் கேட்டுள்ளனர். உடனே அவர், வீட்டில் யாரும் இல்லை, காசும் இல்லை என கூறியுள்ளார்.
இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் வீட்டின் கதவை பலமாக தட்டி பிச்சை போடு பிச்சை போடு என கேட்டுள்ளனர் பிச்சை போட்டால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மர்மநபர்களின் செயலில் ஸ்ரீஜா ஷாமிலிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் பின்பக்க கதவை திறந்து அருகே உள்ளே உறவினர்களின் வீட்டுக்கு செல்ல முற்பட்டார்.இதனை கவனித்த மர்மநபர்கள் அங்கு விரைந்து சென்று, ஸ்ரீஜா ஷாமிலியின் முகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மயக்க பொடி மற்றும் மயக்க மையை தடவி உள்ளனர். இதில் அவர் சுய நினைவிழந்தார்.
உடனே அவர்கள், ஸ்ரீஜா ஷாமிலி அணிந்திருந்த நகை, வளையல், கம்மலை பறித்ததோடு வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு உடனடியாக தப்பி விட்டனர். மொத்தம் 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் மயங்கி கிடந்த ஸ்ரீஜா ஷாமிலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த கொள்ளை பற்றி தகவலறிந்ததும் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் பயிற்சி துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதே சமயத்தில் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ அடங்கிய தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
கொள்ளை குறித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீஜா ஷாமிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையடிக்க வந்த 2 ஆண்கள், 1 பெண்ணுக்கு எத்தனை வயது இருக்கும், முகமூடி அணிந்திருந்தார்களா? என விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டிஎஸ்பி தங்கராமன் கூறுகையில், கழிந்த 3-நாட்களாக சந்தேகப்படும் படியான 3-பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசம் கேட்பது போல் தனியாக இருந்த அந்த வீட்டை கண்காணித்து நோட்டமிட்டு வந்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்த பின்னரும் பட்டதாரி பெண் அவசர போலீஸ் எண்ணுக்கோ காவல் நிலையத்திற்கோ தகவல் கொடுக்காத நிலையில் அந்த கும்பல் கச்சிதமாக கொள்ளையை அரங்கேற்றி சென்றுள்ளதாகவும் சந்தேகப் படும்படியான தெரியாத நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்கலாம் என்றும் சுட்டி காட்டுகின்றனர்.
இதுதொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இளம்பெண்ணின் முகத்தில் மயக்கபொடி தூவி 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்