காஞ்சிபுரத்தில் தாயைக் கறிக்கடை கத்தியால் கொடூரமாகக் கொன்ற மகன்! சொத்து தகராறில் அதிர்ச்சி சம்பவம்!
Kanchipuram Crime: "காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக, தாயை கொடூரமாக கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்"

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காரை ஊராட்சியில் சொத்து மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 65 வயது தாயை அவரது பெரிய மகனே ஆடு வெட்டும் கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சொத்து மற்றும் குடும்பத் தகராறு
காரை ஊராட்சிக்கு உட்பட்ட முருகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் தனலட்சுமி (65). இவருக்கு செல்லப்பன் (50), துரைசாமி (45) என இரண்டு மகன்கள். இதில் துரைசாமி வீட்டின் அருகே கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். செல்லப்பன் மற்றும் துரைசாமி இருவரும் பல வருடங்களுக்கு முன்பு குட்டை புறம்போக்கு பகுதியில் ஒன்றாக வீடு கட்டியுள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்படவே, இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். துரைசாமி சிமெண்ட் சீட் போட்ட சிறிய வீட்டிலும், தாய் தனலட்சுமி அருகிலேயே தார்ப்பாய் குடிசையிலும் வசித்து வந்துள்ளார்.
மின் இணைப்புத் துண்டிப்பு: தொடரும் சண்டைகள்
தாய் தனலட்சுமி மற்றும் துரைசாமியின் வீடுகளுக்கு அருகிலுள்ள செல்லப்பன் வீட்டிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில், மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தாய் மற்றும் தம்பியோடு செல்லப்பன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அண்ணன், தம்பி இருவருமே ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், செல்லப்பன் தான் வளர்க்கும் மாடு போட்ட சாணத்தை, தம்பி துரைசாமி வசிக்கும் பகுதியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட துரைசாமி, செல்லப்பனிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பன், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் துரைசாமியைத் தாக்கியுள்ளார்.
தடுக்க வந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்
மகன் துரைசாமியைத் தாக்குவதைப் பார்த்த தாய் தனலட்சுமி, இருவரையும் விலக்கிவிட முயன்றுள்ளார். அப்போது, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற செல்லப்பன், வீட்டில் ஆட்டுக் கிடாய் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்துள்ளார். அவர் கண்மூடித்தனமாகத் தாய் தனலட்சுமியை வெட்டியதில், பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்தார்.
கத்தியைக் கழுவி வைத்த மகன்
தாயைக் கொடூரமாக வெட்டியப் பின்னும், செல்லப்பன் தான் பயன்படுத்திய கத்தியை, ஆடு வெட்டிய பிறகு கழுவி வைப்பது போன்று, வீட்டில் பத்திரமாகக் கழுவி வைத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
3 பேர் கைது: போலீஸ் விசாரணை தீவிரம்
இச்சம்பவம் குறித்து பொன்னேரி கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தாயைக் கொடூரமாகக் கொன்ற செல்லப்பன் மற்றும் அவரது மனைவி புனிதா, மகன் யோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சொத்து மற்றும் குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் கொடூரமாக வெட்டிக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக தாயை மகனே குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை மற்றும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





















