CRIME: காஞ்சியை உலுக்கிய கொள்ளை சம்பவம் - கார் கண்ணாடி உடைத்து பட்டு சேலை, லேப்டாப் திருட்டு
மக்கள் நடமாட்டம் மிகுந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் வாசல் அருகே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
சுப நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் வந்து பட்டு சேலை எடுத்து சாமி தரிசனம் செய்ய சென்றவர்களின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2,80,000 மதிப்புள்ள பட்டு சேலை, லேப்டாப் மற்றும் பணம் கொள்ளை. மக்கள் நடமாட்டம் மிகுந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் வாசல் அருகே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. கிரசர் தொழில் செய்து வரும் பழனியின் மகன் கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியை சேர்ந்த பெண் நிச்சயக்கப்பட்டது. நிச்சயதார்த்திற்க்கு பட்டு சேலை எடுக்க இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இரண்டு கார்களில் காஞ்சிபுரம் வந்துள்ளனர். காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூபாய் 60 ஆயிரத்திற்கு நான்கு பட்டு சேலைகளை வாங்கிக் கொண்டு காஞ்சிபுரம் வந்தோமே அப்படியே காமாட்சியம்மனை தரிசனம் செய்யலாம் என இரு குடும்பத்தினரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்யசென்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலுக்கு சென்றவிட்டு மீண்டும் 7 மணி அளவில் சுவாமி தரிசனம் முடித்து திரும்பி வந்து பார்த்த பொழுது திருவக்கரையைச் சேர்ந்த பழனி என்பவரின் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சியிட்டனர். பின்னர் காரின் உள்ளே பார்த்த பொழுது காரில் வைத்திருந்த மாப்பிள்ளை கார்த்திகேயனுடைய தனியார் நிறுவன இரண்டு லட்சம் மதிப்புள்ள லேப்டாப், 60000 மதிப்புள்ள பட்டு சேலைகள் மற்றும் ரூபாய் 20000 கொள்ளை போனது தெரியவந்து மிகவும் கவலை உற்றனர். மேலும் மற்றொரு இருக்கையில் ஆப்பிள் ஐபோன் அப்படியே இருந்தது. அதை கொள்ளையர்கள் எடுக்கவில்லை.
திருட்டு சம்பவம் குறித்து அருகில் இருந்தவரிடம் சோகத்துடன் விசாரணை செய்துவிட்டு உறுதியான தகவல்கள் கிடைக்காததால் பின்னர் சிவகாஞ்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சிவா காஞ்சி காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். சுப நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்க வந்து சுவாமி தரிசனம் செய்ய சென்ற பொழுது காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது இரு குடும்பத்தினர் இடையே கவலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இது போன்ற சம்பவங்கள் காமாட்சியம்மன் கோவில் அருகே நடந்ததில்லை என அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்