Crime:பல கோடி ரூபாய் பணம், நகைகளுடன் நகை கடை உரிமையாளர் தப்பி ஓட்டம்... சேலத்தில் பரபரப்பு.
நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் வெளி மாவட்டங்களில் பதுங்கி உள்ளாரா? என்றும் காவல்துறையினர் விசாரணை.
சேலம் மாவட்டம் வீராணம் அடுத்துள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் எஸ்விஎஸ் என்ற பெயரில் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நகை கடைகளை வைத்திருந்தார். அதேபோல் ஆத்தூர், அரூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் கிளைகளை தொடங்கி நகை கடை நடத்தி வந்தார். இங்கு பழைய நகைகளை வாங்குவது மற்றும் நகை சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அம்மாபேட்டை மற்றும் சீலநாயக்கன்பட்டியில் உள்ள நகை கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால், சீட்டு கட்டியவர்கள், நகை எடுக்க வந்தவர்கள் கடைக்கு வந்து பார்த்து விட்டு சென்றனர்.
பின்னர், அவர்கள் நகை கடை இரண்டு நாட்களாக மூடப்பட்டிருப்பதை குறித்து விசாரணை நடத்தியபோது சபரி சங்கர், கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது. இதனால் நகை சீட்டு கட்டியவர்கள், நகை வாங்க வந்தோர் என ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல் உள்பட 11 இடங்களில் உள்ள நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் பல கோடி மதிப்புள்ள நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த நகை சீட்டு கட்டியவர்கள், கடையின் ஊழியர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் காலை கடைகள் முன்பு திரண்டு வரத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அப்போது கடையில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதில் 4 பேர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரஞ்சித் என்பவர் ரூபாய் 11 லட்சம் வரை நகைக்காக சீட்டு பணம் கட்டியதாக புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக 4 ஊழியர்களை வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் வெளி மாவட்டங்களில் பதுங்கி உள்ளாரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.