மயிலாடுதுறை பரபரப்பு: அரிசி தகராறில் தொடங்கிய மோதல், காவலர்களுக்கு கத்தி குத்து, இறுதியில் சோக முடிவு..
பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், விசாரிக்கச் சென்ற இரண்டு காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர், காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், விசாரிக்கச் சென்ற இரண்டு காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர், காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி மூட்டையால் ஏற்பட்ட மோதல்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அறிவாளிமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான ஆனந்த். இவர் கடந்த 14.01.2025 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் ரேஷன் கடையில் அரிசி வாங்கி வந்தபோது, எதிர்பாராதவிதமாக அரிசி பையில் இருந்து கீழே கொட்டியுள்ளது.
அப்போது அங்கு நின்றிருந்த மேலமங்கைநல்லூர் விவசாய கூட்டுறவு சங்க இரவு காவலாளி ஞானசேகரன் (42) என்பவர், கீழே கொட்டிய அரிசியை அள்ளி ஆனந்தின் பையில் போட்டுள்ளார். இதில் மண் கலந்திருப்பதாகக் கூறி ஆத்திரமடைந்த ஆனந்த், ஞானசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், அரிவாளுடன் அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியதாகத் தெரிகிறது.
காவலர்கள் மீது தாக்குதல்
காயமடைந்த ஞானசேகரன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே, காவல் ஆய்வாளரின் உத்தரவின் பேரில் முதல் நிலை காவலர் சாமிநாதன் மற்றும் தனிப்பிரிவு காவலர் சதீஸ்குமார் ஆகியோர் அன்று மாலை 6.30 மணியளவில் விசாரணைக்காக அறிவாளிமங்கலம் சென்றனர்.
அங்கே அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆனந்திடம் இருந்து ஆயுதத்தைப் பறிக்க காவலர் சாமிநாதன் முயன்றார். அப்போது ஆவேசமடைந்த ஆனந்த், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் சாமிநாதனைத் தாக்கினார். இதனைத் தடுக்க வந்த தனிப்பிரிவு காவலர் சதீஸ்குமாரையும் கத்தியால் குத்திவிட்டு ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தத் தாக்குதலில் காவலர் சதீஸ்குமாருக்கு வயிற்றிலும், சாமிநாதனுக்கு வலது கை கட்டை விரலிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.
தேடப்பட்டு வந்த நிலையில் தற்கொலை
இந்தச் சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் மற்றும் காயமடைந்த காவலர் சாமிநாதன் கொடுத்த புகார்களின் அடிப்படையில், பெரம்பூர் போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த ஆனந்த், 15.01.2026 இன்று அறிவாளிமங்கலத்தில் உள்ள தனது மாமியார் வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனந்தின் மனைவி கௌதமி (26) அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எஸ்.பி. நேரடி ஆய்வு
தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
உயிரிழந்த ஆனந்தின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின், அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சிறிய வாக்குவாதம் கொலையில் ஆரம்பித்து, போலீஸ் தாக்குதல் மற்றும் தற்கொலை என முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






















