சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் : கையும் களவுமாக பிடித்த மருத்துவக் குழுவினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கலம் மருத்துவம் பார்த்த 2 போலி பெண்மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த மருத்துவக்குழுவினர்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா(55), பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள இவர், செங்கம் பேருந்து நிலையம் அருகில் கிளினிக் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கிலமுறையில் சிகிச்சை அளித்து வருகிறார். தகவலறிந்த கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருளானந்தம் தலைமையில் அதிகாரிகள் செங்கம் பகுதியில் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது, அதிகாரிகள் வருவதை அறிந்த போலிமருத்துவர் ரேணுகா மற்றும் பணியாளர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, அந்த கிளினிக்கில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தப்பியோடிய போலி மருத்துவர் ரேணுகாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று அந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் வைத்ததிருந்த சீலை அகற்றிவிட்டு, ரேணுகா மீண்டும் மருத்துவம் பார்த்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தலைமை மருத்துவர் அருளானந்தம் தலைமையில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, போலி மருத்துவர் ரேணுகா அங்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை, அதிகாரிகள் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர். அங்கு வைத்திருந்த உபகரணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அதனைதொடர்ந்து, கிளினிக்கிற்கு மீண்டும் சீல் வைத்தனர்.பின்னர், தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில் செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
போலி மருத்துவர் ரேணுகா இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையிரனால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் வெளியே வந்ததும் தொடர்ந்து கருக்கலைப்பு செய்து வருவதும், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. போலி மருத்துவர் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று ஜமுனாமரத்தூரில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போளூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜமுனாமரத்தூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், ஜமுனாமரத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி ( 40) என்பதும், அவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு டிப்ளமோ சித்தா முடித்தவர் என்பதும் வீட்டிலேயே கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.
மேலும் அங்கு மருந்து, மாத்திரை, ஊசி போன்றவை இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கிருஷ்ணவேணியை ஜமுனாமரத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் மேஜர் சவுத்திரி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை கைது செய்தனர்