Hyderabad: பப்பில் +2 மாணவர்களுக்கு விருந்து கொடுத்த பள்ளி! சிறுமி வன்கொடுமையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை
தெலங்கானாவில் பப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 வது நபரை கைது செய்தது காவல்துறை. பள்ளி நிர்வாகமே மாணவர்கள் பப்புக்கு வர ஏற்பாடு செய்த ஷாக் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பார்ட்டி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய 17 வயது சிறுமியை மெர்சிடீஸ் பென்ஸ் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டது காவல்துறை. இந்நிலையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
ஹைதராபாத்தின் பணக்கார ஏரியாவாக பார்க்கப்படும் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி பப் ஒன்றில் 18 வயதுக்கு குறைவான இளைஞர்கள் குவிந்துள்ளனர். 12ம் வகுப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை குறிப்பிட்ட பள்ளி நிர்வாகமே பப்பில் ஏற்பாடு செய்துள்ளது. 21 வயதுக்குட்பட்ட யாருக்கும் பப்புக்குள் அனுமதி இல்லை என்ற நிலையில் பள்ளி மாணவர்களைப் பள்ளி நிர்வாகமே பப்புக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் கொடுத்து முன் பதிவும்செய்யப்பட்டுள்ளது. இந்த பப்புக்கு வந்த 17 வயது சிறுமி பார்ட்டியை முடித்துக்கொண்டு சாலையில்போய்க்கொண்டுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சொகுசு கார் ஒன்று அவரை அழைத்துக்கொண்டு விடுவதாக கூறியுள்ளனர். அவர்களை நம்பி காரில் ஏறிய சிறுமியை அங்கிருந்த சிலர் காரிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சிறுவர்கள்
கடந்த மே 28ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காரையும் அம்மாநில காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக அப்பெண் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தன் வீட்டில் கூறாமலும், சிறுவர்கள் தன்னை அவமானப் படுத்தியதாக மட்டுமே கூறிய நிலையில், இது குறித்து வழக்குப் பதியப்பட்டது. பின்னர் இது குறித்து பேசிய சிறுமி, தன்னை சில இளைஞர்கள் பார்ட்டி முடிந்து வீட்டில் விடுவதாக உறுதியளித்ததாகவும், அதனை நம்பி வாகனத்தில் இருந்த மூன்று முதல் நான்கு நபர்களுடன் வாகனத்தில் ஏறிச்சென்றபோது இருட்டான பகுதியில் வாகனத்தை நிறுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. மகன்..
இந்தக்குற்ற சம்பவத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் மகனும் ஈடுபட்டதாக தெரிகிறது. தற்போது உரிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எம்.எல்.ஏ மகனும் விரைவில் கைதாவாரென போலிசார் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை வரவேண்டுமென ஆளுநர் தமிழிசை சவுந்தராஜான் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது