லாக்கப்பில் காதலன்... விடுவிக்கக் கோரி கழுத்தை அறுத்த இளம் பெண்... சிதறிய போலீசார்!
காதலனை மீட்பதற்காக தேவி காவல் நிலையம் வந்ததும், அதற்காக தற்கொலைக்கு முயன்றதும், நீண்ட நாட்களாக திருமணத்திற்கு புறம்பான உறவில் அவர்கள் இருப்பதும் தெரியவந்தது.
காதல் என்னவெல்லாம் செய்யும்... எதையும் செய்யும் என்பதை தான் நாம் பல சம்பவங்களில் இருந்து தெரிந்து கொள்கிறேன். காதலன் ரவுடியாவது... ரவுடி காதலனாவது... என பல தரப்பட்ட காதல் கதைகளையும், கதை காதல்களையும் சினிமாவிலும் நேரிலும் பார்த்து பழகி நமக்கு, இந்த செய்தி பெரிய அதிர்ச்சி இல்லை என்றாலும்... இதுவும் புதிது தான்!
சென்னை திருவெற்றியூர் காலடிப்பேட்டை பி.கே.என் காலனி ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 72 வயது அம்மாயி. வீட்டில் அவர் தனியாக இருந்த சமயத்தில், திடீரென வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள்,அம்மாயிவை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மிரண்டு போன அம்மாயி, அவர்கள் கேட்பதை தருவதாக கூறியுள்ளார். அவர் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த இரு மொபைல் போன்களை பறித்துக் கொண்ட கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது அம்மாயில் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனாலும் அதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடினர். இச்சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அம்மாயி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் வந்த விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அறிந்த போலீசார், அவற்றை ஆய்வு செய்தனர். விசாரணையில், சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகரைச் சேர்ந்த 21 வயதான வசந்த் என்பதும், அவருடன் இரு சிறுவர்கள் கொள்ளையடிக்க வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 12 கிராம் தங்க செயின் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தனர். அந்த நேரத்தில் திருவெற்றியூர் காவல் நிலையம் வந்த இளம் பெண் ஒருவர், கொள்ளையன் வசந்தை விடுவிக்குமாறு போலீசாரிடம் கூறினார். அதற்கு போலீசார் மறுத்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்த அந்த பெண், தற்கொலைக்கு முயன்றார்.
அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான தேவி என்பதும், வசந்தின் காதலி என்பதும் தெரியவந்தது. காதலனை மீட்பதற்காக தேவி காவல் நிலையம் வந்ததும், அதற்காக தற்கொலைக்கு முயன்றதும், நீண்ட நாட்களாக திருமணத்திற்கு புறம்பான உறவில் அவர்கள் இருப்பதும் தெரியவந்தது. கொள்ளை வழக்கோடு, தற்போது தற்கொலை முயற்சி வழக்கையும் சேர்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்