பிறந்த நாளில் காதலனுடன் பேச முடியாத விரக்தி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
"அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பேச்சை கேட்டு நடப்பேன்” என கடிதம் எழுதியிருந்தார்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராம் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது மகள் சுவாதி(18). இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவரை சோமுராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சின்னபிள்ளை வீட்டில் தங்க வைத்தார். அங்கு இருந்த போது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் சோமுராஜ்க்கு தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மகளை கண்டித்தார். பின்னர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். சுவாதியிடம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சுவாதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பெற்றோர் புத்தாடைகள் எடுத்து வைத்து இருந்தனர். குளித்து விட்டு அந்த துணியை அணிந்து கொண்டு வந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று காலை 7 மணியளவில் சுவாதி குளிப்பதற்காக தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவே இல்லை. இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின் விசிறியில் சுவாதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். சுவாதி குளித்து முடித்து விட்டு பெற்றோர் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கொண்டு அதன் பின்னரே தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் அறையை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சுவாதியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுவாதி தூக்கில் தொங்கிய அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ”அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பேச்சை கேட்டு நடப்பேன்” என எழுதியிருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.