கஞ்சா, லாட்டரி விற்பனையாளர்கள் கைது - விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் அதிரடி
விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனையில் சிக்கிய கஞ்சா, லாட்டரி விற்பனையாளர்கள்.
கஞ்சா எண்ணெய் மற்றும் ஊசி விற்பனை செய்தவர்கள் கைது :
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா எண்ணெய் மற்றும் ஊசி விற்பனை செய்து வந்த இருவர் கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியை சேர்ந்த குருவில்லா என்பவரின் மகன் போவாஸ் வயது மற்றும் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த பிரசாத் ஜோசப் என்பவரின் ஷெரின் ஓமீன் பிரசாத் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கஞ்சா எண்ணெய் மற்றும் ஊசி கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் :
திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவர்களை மயிலம் காவல் நிலைய போலீசார் மடக்கிப் பிடித்தனர். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக மயிலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் லட்சுமி, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் ஜக்காம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக 3 பேர் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், பைக்கில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக்குடன் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டிவனம் டிவி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினித்(23), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் ஸ்ரீகாந்த்(19) மற்றும் பெரமண்டூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய்(25), ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது :
மேலும், திண்டிவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காவேரிப்பாக்கம் சுப்புராய பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் முஸ்தபா(30). என்பதும், இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம் ஜி ரோடு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பால்ராஜ் வயது 46, என்பவர் விற்பனைக்காக லாட்டரி டிக்கெட் வைத்திருந்தது கண்டறிந்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்