(Source: ECI/ABP News/ABP Majha)
பெரியார் பல்கலை.,யில் கோடிக்கணக்கில் மோசடி... முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!
ஒவ்வொரு பருவத் தேர்விற்கும் விதிகளை மீறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்காக மட்டும் ரூ. 50 லட்சம் வரை நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் மற்றும் பணி நியமனத்தில் முறைகேடு. முன்னாள் துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் சி.ஓ.இ மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.
சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவு வெளியீட்டு நடவடிக்கைகளை தனியார் வசம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் துணைவேந்தர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மீது விஜிலென்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து, இவரது மனைவி விஜயலட்சுமி பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு விவகாரத்தை தனியாருக்கு வழங்கி முறைகேடு செய்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறையில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை , பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியீட்டு நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் வசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விடைத்தாள் ரூ.3 முதல் ரூ.5.25 வரை கணக்கு காட்டி நிதிக்குழு ஒப்புதல் பெறாமல் மொத்தமாக ரூ. 3.26 கோடி தனியார் நிறுவனத்திற்கு பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது. ஆனால், ரகசியம் காக்கப்பட வேண்டிய தேர்வு முடிவு வெளியிடும் பொறுப்பை எந்தவித விதிமுறையும் பின்பற்றாமல் தனியார் வசம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழக துணை வேந்தருக்கு ரூ. 10 லட்சம் வரை மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு பருவத் தேர்விற்கும் விதிகளை மீறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்காக மட்டும் ரூ. 50 லட்சம் வரை நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல வகைகளில், தற்போதைய துணை வேந்தர் சுவாமிநாதன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கு முத்து ஆகியோர் ஆதாயம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 5 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக இணைப்பு அனுமதி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவித வசதியும் இல்லாத 3 கல்லூரிகளுக்கு விதிகளை மீறி புதிய பாடப்பிரிவுகள் நடத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலகட்டத்தில் பதிவாளராக இருந்த அங்கமுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் தகுதியற்றவர்கள் பணி நியமனம், தொடர்பாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அங்கு முத்துவின் மனைவி விஜயலட்சுமி சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 154 பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் உரிய தகுதி இல்லாததும் தெரியவந்தது. அதேசமயம், 46 நியமனங்களுக்கான தேர்வுக் குழுவில் பதிவேடுகளும் , மாயமாக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 47 ஆசிரியர் அல்லா பணியாளர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்தது, அதில் 10 பேரின் சான்றிதழ்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது.
ஆதாயம் பெற்றுக்கொண்டு, முறை கேடான பணி நியமனங்களை மேற்கொண்டதற்காக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லீலா மற்றும் பதிவாளர் அங்கமுத்து மீது கூட்டுச்சதி மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.