புதுச்சேரியில் பெண் ஊழியரை நகைக்காக கடத்தி எரித்து கொன்ற ஓட்டுநர் கைது...!
புதுச்சேரி அருகே தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியர் கடத்தி கொலை செய்யப்பட்டு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து புதரில் வீசிய டிரைவர் கைது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் ஆரோக்கியமேரி கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலைபார்த்து வந்தார். கடந்த 19 ஆம் தேதி மதியம் வழக்கம்போல் ஆரோக்கியமேரி வேலைக்கு சென்றார். அதன்பிறகு பணி முடிந்து இரவு வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வில்லியனூர் காவல் நிலையத்தில் ஆரோக்கியமேரியின் சகோதரி சவரியம்மாள் பாத்திமா புகார் தெரிவித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரபு ஆரோக்கியமேரியை தேடி வந்தார்.
இந்தநிலையில் அவருடன் மருத்துவமனையில் டிரைவராக வேலைபார்த்து வந்த அரியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது ஆரோக்கியமேரியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை பிடித்து கடந்த 21ஆம் தேதி போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து விட்டு வழக்குப்பதிவு செய்யாமல் அவரை திருப்பி அனுப்பினர். இந்தநிலையில் ஆரோக்கியமேரியை கண்டுபிடிக்க கோரியும், ரமேஷை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து இரவோடு இரவாக ரமேசை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
அதாவது, கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட ஆரோக்கியமேரி சண்முகாபுரம் அருகே ஸ்கூட்டரில் வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்து ரமேஷ் மறித்துள்ளார். தனது மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாக கூறி வீட்டில் இறக்கி விடுமாறு லிப்ட் கேட்டுள்ளார். இதை நம்பிய ஆரோக்கியமேரி தனது ஸ்கூட்டரில் ரமேசை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். வில்லியனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏரிக்கரை ஓரம் சென்று கொண்டிருந்தபோது, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவ செலவுக்காக நகையை தருமாறு ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால் நகையை தர ஆரோக்கியமேரி மறுத்ததால் அவருடன் ரமேஷ் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்து ஆரோக்கியமேரியை கழுத்தை நெரித்து ரமேஷ் கொலை செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரது உடலை மடக்கி ஸ்கூட்டரின் முன் பகுதியில் வைத்துக்கொண்டு விழுப்புரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு புதருக்கு கொண்டு சென்று வீசினார். பின்னர் ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை எடுத்து ஆரோக்கியமேரியின் உடலில் ஊற்றி தீ வைத்தார். இதன்பின் ஸ்கூட்டரை அங்கேயே போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கிடையே ஆரோக்கிய மேரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தவே பயந்து போன ரமேஷ் மறுநாள் அந்த இடத்துக்கு மீண்டும் சென்று பார்த்துள்ளார். அப்போது பாதி எரிந்த நிலையில் ஆரோக்கிய மேரியின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் மாட்டிக் கொள்வோம் என எண்ணி எரிந்த நிலையில் கிடந்த ஆரோக்கிய மேரியின் உடலை 2 சாக்குமூட்டைகளில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் தூக்கி வந்து வில்லியனூர் அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பூத்துறையில் ஒரு புதருக்குள் வீசி விட்டு தப்பி சென்றார். சந்தேகமடைந்து போலீசார் முதலில் அவரை அழைத்து விசாரித்த போது கூட எதுவுமே தெரியாதது போல் நடந்து கொண்டார்.
அதன்பிறகு தான் துப்பு துலங்கியதையடுத்து வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் கிடந்த ஆரோக்கியமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஆரோக்கியமேரியின் உடல் வைக்கப்பட்டிருந்த கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு இருந்தால் குற்றவாளியை உடனே கைது செய்து இருக்க முடியும். கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே ஆரோக்கியமேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். குற்றவாளியை உடனே கைது செய்தால் மட்டுமே பிரேதத்தை வாங்குவோம் என முற்றுகையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அரியூர் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.