”நெஞ்சில் ஈரமே இல்லையா?” மகள் உடல் முழுவதும் சூடு வைத்த தந்தை ; தகவல் சொன்ன மக்கள்..!
”அடுப்பில் கரண்டியை காய்ச்சி பெற்ற குழந்தை உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார் கல் நெஞ்சம் கொண்ட அந்த தந்தை”
மது போதையில் சைக்கோத் தனமாக பெற்ற மகள் உடல் முழுவதும் சூடு வைத்த கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சிறார் உதவி அமைப்புக்கு அழைத்து காப்பாற்றியுள்ளனர்.
என்ன நடந்தது ? மகளை துன்புறுத்திய தந்தை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடவேர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உயிரிழந்த நிலையில் தனது எட்டு வயது மகளுடன் இவர் வசித்து வருகிறார்.இவரின் மகள் ஸ்ரீவாஞ்சியம் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.செல்வகுமார் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து சைக்கோத் தனமாக மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர்
இந்த நிலையில் நேற்று காலை செல்வகுமாரின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து செல்வகுமார் வேலைக்குச் சென்ற பின்பு அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், செல்வகுமார் தனது மகளுக்கு சூடு வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த குழந்தையை அவரது தந்தை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை என்பதாலும் தினமும் இவ்வாறு இந்த பெண் குழந்தையை அவர் துன்புறுத்தி வருவதை தாங்க முடியாமலும் அவர்கள் இதுகுறித்து 1098 என்கி சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு நேற்று மாலை தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த சைல்ட் லைன் அதிகாரிகள்
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அறிவுறுத்தலின்படி சைல்டு ஹெல்ப்லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று குழந்தையிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தை குழந்தையின் நெஞ்சு, தொடை, கால், கை என உடல் முழுவதும் சூடு வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த குழந்தையை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியருக்கு பறந்த தகவல்
இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், குழந்தையை மீண்டும் தந்தையிடம் அனுப்ப வேண்டாம் என்றும் விடுதியில் சேர்க்கும் படியும் ஆட்சியர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏன் இதுபோன்று செல்வகுமார் தன் குழந்தையிடம் நடந்துகொண்டார் என்பது குறித்து காவல்துறையினரும் சைல்ட் லைன் அமைப்பினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை மிரட்டினாரா தந்தை ?
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரித்த போது : முதலில் சூடான பால் மேலே கொட்டி தான் காயம் ஏற்பட்டதாக கூறியது. அதனைத் தொடர்ந்து அப்பா மீண்டும் இது போன்று செய்யாமல் இருக்க அவரை கண்டிப்பதாக கூறியதை யடுத்து தந்தையின் பைக் சாவியை தொலைத்து விட்டதால், கரண்டியை அடுப்பில் வைத்து சூடு வைத்தார் என்று அந்த பெண் குழந்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஒரு வாரத்தில் செல்வகுமார் அவரது மகளுடன் திருப்பூர் செல்லவிருந்த நிலையில் குழந்தை அவரிடமிருக்கு மீட்கப்பட்டதாக சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் தெரிவித்தனர். பெற்ற தந்தையே மகளை மதுபோதையில் சைக்கோத் தனமாக கொடுமைப்படுத்தி சூடு வைத்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.