Crime: நண்பருடன் மெரினாவுக்கு சென்ற பெண்.. ப்ளாக்மெயில் செய்த போலி போலீஸ் அதிகாரி.. சென்னையில் ஒரு பரபர சம்பவம்..
ஆசியாவின் மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு ஆண் நண்பருடன் சென்ற திருமணமான ஒரு பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் அதிகாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆசியாவின் மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அருகிலேயே மத வழிபாட்டு தலங்கள், தலைவர்களின் நினைவிடங்கள் உள்ளதால் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தால் மெரினா கடற்கரையே திணறும். காதலர்கள், தம்பதியினர், குடும்பத்தினர் என அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் இடமாக உள்ள மெரினாவில் சில சமயங்களில் குற்ற சம்பவங்களும் அரங்கேறும்.
பணம் மற்றும் நகை திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை தடுக்க நாள் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட மெரினாவில் போலீஸ் அதிகாரி என போலியாக கூறி ஒருவர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தன்னுடன் அலுவகத்தில் பணியாற்றும் ஆண் நண்பருடன் மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், போலீஸ் என கூறி அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இதனை உன் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அப்படி செய்யாமல் இருக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். நிலைமையை சமாளிக்க அப்பெண்ணும் பணம் கொடுக்க இதுவே தொடர்கதையாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் அடிக்கடி போன் செய்து பணம் கேட்கும் அந்த அதிகாரிக்கு கிட்டதட்ட ரூ.2 லட்சம் வரை அப்பெண் கொடுத்துள்ளார்.
இதுபோக மேலும் 2 லட்சம் மொத்தமாக கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அப்பெண் கூறியதுபோல சதீஷ்குமார் என்ற பெயரில் யாரும் மெரினா காவல் நிலையத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
உடனே சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அது மணலி எம்.எம்.டி.ஏ. மாத்தூர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது. போலீசார் அறிவுறுத்தல்படி அப்பெண் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வந்தால் பணம் தருவதாக சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பி அங்கு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சதீஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், மெரினாவில் திருமணமான பெண்கள், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஜோடிகளை அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அதனை அப்பெண்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.
இதில் சிலரிடம் பணமும் பெற்றுள்ளார். அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில் பல காதல் ஜோடிகளின் புகைப்படங்களும் இருந்தது.கடந்த 3 ஆண்டுகளாக இந்த மோசடியில் சதீஷ்குமார் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.