Puducherry: வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை! கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது!!
புதுச்சேரி: திருபுவனையில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
![Puducherry: வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை! கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது!! Eight people, including college students, have been arrested for renting a house and selling cannabis Puducherry: வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை! கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/30/0ec61364fade84756e6e150abc1c673f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்கப்படுவதை தடுக்க வில்லியனூர் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் வரதராஜப்பெருமாள், ரமேஷ், பார்த்தசாரதி, ரங்கராஜ், பிரபு ஆகியோர் திருபுவனை, நெட்டப்பாக்கம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மற்றும் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள வி.பி.சிங் நகரில் ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதையடுத்து வீட்டில் சோதனை போட்டதில் அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. கஞ்சாசை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்த 5 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். இதில், ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களான ராஜேஷ் (வயது 22), வீரகலைமணி (23) மற்றும் திருபுவனையை சேர்ந்த தாமோதரன் (22), விக்னேஷ்குமார் (26), எழிலன் (19) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் திருபுவனை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆகாஷ் (22), அரியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), காமேஷ் (19) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சா தேவைப்படுவதுபோல் பேசி வரவழைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கஞ்சா பொட்டலங்களை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் 750 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)