சிகிச்சையில் இருந்த தம்பதி... அரை கிலோ தங்கத்தோடு காரில் எஸ்கேப் ஆன டிரைவர்! புதுக்கோட்டை டூ சென்னை சம்பவம்!
புதுக்கோட்டையில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நகைக்கடை உரிமையாளரின் கார், ரூ.5 லட்சம் மற்றும் அரை கிலோ தங்கத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தை சேர்ந்தவர் அகமது இப்ராகிம் என்பவர். நாற்பத்தி நான்கு வயதாகும் இவர், அம்மாபட்டினத்தில் சுமங்கலி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் கவுசியா பேகம். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இந்த தம்பதிக்கு, இதுவரை குழந்தை இல்லை. இதனால், சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் தொழிலதிபர், மனைவியுடன் சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்து சிகிச்சைகள் பெற்றுள்ளார். சென்னை வருவதற்காக வெகுதூரம் ஓட்ட வேண்டும் என்பதால், காரை ஓட்ட உறவுக்காரர் முகமது பாரூக்கை கூட்டி கொண்டு வந்துள்ளார் அகமது இப்ராஹிம்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேரமாகும் என்பதால் எப்போதும் வெளியே இருப்பார் முகமது ஃபாரூக். அவர்கள் இருவரும் சிகிச்சை முடிந்தது வெளியே வந்தனர். வேலை முடிந்ததால் வீட்டிற்கு புறப்பட டிரைவருக்கு போன் செய்தபோது, முகமது ஃபாருக்கின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்ச நேரம் எங்காவது போயிருப்பார் என்று காத்திருந்தனர். பின்னரும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், பக்கத்தில் எங்காவது இருக்கிறாரா என்று தேடினர். வெகு நேரமாகியும் அவர் வராததால் அதிர்ந்து போன தம்பதியினர் பரபரத்து அங்கேயே தேடி இருக்கின்றனர். பின்னர் பல இடங்களில் தேடியும் முகமது ஃபாரூக்கையும் காரையும் காணவில்லை. அகமது இப்ராஹிம் கவுசியா பேகம் அந்த காரில் ரூ. 5 லட்சம் பணமும், அரை கிலோ தங்கமும் வைத்திருந்துருக்கின்றனர். காரையும் பணத்தையும் நகையையும் பறிகொடுத்த தம்பதியினர் இதுபற்றி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முகமது ஃபாருக்கின் மீது புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திக்கொண்டுள்ளனர்.
இதனிடையே மாயமான கார் டிரைவர், தனது மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, "நமது உறவினரிடமே இதுபோன்று நடந்துகொண்டது தவறு" என மனைவி கண்டித்தும் மனம் வருந்தியுள்ளார். உடனே அவர் காரை கொடுத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு, "தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்தி உள்ளேன், அவர்களை வந்து எடுத்துக்கொள்ள சொல்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுபற்றி டிரைவரின் மனைவி, சென்னை காவல்நிலையத்தில் உள்ள உறவினர் இப்ராகிமை தொடர்பு கொண்டு, கார் நிற்குமிடத்தை தெரிவித்துள்ளார். அதன்பேரில், இங்கிருந்து தஞ்சாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டு, அவர்கள் உதவியுடன் காரை போலீசார் மீட்டனர். ஆனால் அதிலிருந்த பணம், நகைகள் மாயமானது தெரிய வந்தது. காரை மட்டும் விட்டு பணத்தையும் நகையையும் எடுத்து சென்ற டிரைவரின் செல்போன் சிக்னலை டிராக் செய்து, அவரை தேடி வருகின்றனர். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து அவர் மனைவியிடம் தெரிவித்தாரா என்பது பற்றியும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.