இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
மாணிக்கத்தை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் காவல் நிலைய முன்பாக அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் இளைஞர் மது போதையில் நுழைந்தார். இதனால் திருமலைகிரி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசவார்த்தைகளால் திட்டி அந்த வாலிபரை அடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி. மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவபெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் பிரவீன் சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் திட்டிய மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த திருமலைகிரி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாணிக்கம் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி சேலம் இரும்பாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் சேலம் இரும்பாலை காவல் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இதன்படி மாணிக்கத்தை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் காவல் நிலைய முன்பாக அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாலிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணிக்கத்தை வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாச வார்த்தைகளில் திட்டியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணிக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.