ப்ரேக்-அப்புக்கு பழிவாங்கும் அகங்காரம் : அந்தரங்க படங்களை சோஷியல் மீடியாவில் பதிவேற்றியவர்கள் கைது..
சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கல்லூரி மாணவியின் அந்தரங்க படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட முன்னாள் காதலன் மற்றும் இப்போதைய காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலர் சதீஷ் திண்டுக்கல் ரெட்டை மலை பகுதியை சேர்ந்தவர். காதலிக்கும் போது அந்த கல்லூரி மாணவி தனது அந்தரங்க புகைப்படங்களை தனது காதலன் சதீஷுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்தக்காதல் முறிந்துள்ளது.
கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துள்ளனர். பின்னர் ஃபேஸ்புக் மூலம் நண்பரான அருண் என்பவருடன் அப்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் முன்னால் காதலன் சதீஷுக்கு தெரியவர அவர், தன்னிடம் இருந்த காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இப்போதைய காதலன் அருணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருவரிடம் இருந்தும் அந்த புகைப்படங்கள் இவரின் நண்பர்களான மைக்கேல்பாளையம் நெல்சன், தூத்துக்குடி விஷ்வா ஆகியோருக்கும் சென்றுள்ளன. செல்போனில் இருந்து கைமாறிய அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தன்னுடைய அந்தரங்க படம் சோஷியல் மீடியாவில் பரவுவதை கண்ட கல்லூரி மாணவி இது தொடர்பாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த திண்டுக்கல் சதீஷ், மைக்கேல்பாளையம் நெல்சன் தூத்துக்குடி அருண், விஷ்வா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய சதீஷ், நெல்சன் ஆகியோரை கைது செய்த போலீசார் திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த அருண், விஷ்வா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்
இணையத்தில் பல மோசடிகளும், மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் செக்ஸ் வீடியோ மிரட்டல் எனப்படும் மோசடி அதிகரிப்பது குறிப்பிட்டுள்ள போலீசார் சில பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- தெரியாத எண்ணில் இருந்து வீடியோகால் வந்தால் தவிர்க்க வேண்டும்
- இணையம் எதையுமே மன்னிக்கவோ, மறக்கவோ செய்யாது. நீங்கள் இணையத்தில் எந்த விதத்திலும் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கே எதிராக அமையலாம்
- சோஷியல் மீடியாவில் நண்பர்கள் கிடைப்பது சாதாரண விஷயமே. ஆனால் அவர்களின் எல்லையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். யாராவது அதிக நெருக்கத்தை காட்டினால் உஷாரகிவிடுங்கள்
- எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இணையத்தில் அந்தரங்க வீடியோக்களை அனுப்புவதை தவிருங்கள். செல்போனில் அந்தரங்க வீடியோ , புகைப்படம் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது
- எதாவது மர்மமான வித்தியாசமான மின்னஞ்சல் தேடி வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும். தேவையில்லாத வெப்சைட்டுகளை தொடவேகூடாது.