Actor Dileep Case | ”கைதுசெய்த எஸ்.பி சுதர்ஷனின் கையை வெட்டுவேன்” என பேசினார் நடிகர் திலீப் : FIR அறிக்கை என்ன சொல்கிறது?
நடிகர் திலீப் மீது சமீபத்தில் பதியப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் இப்படி செல்கிறது -
2017-இல் பிரபல மலையாள பெண் நடிகரின் மீது பாலியல் தாக்குதலை ஏவியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நடிகர் திலீப் மீது, வழக்கை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டதாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட நடிகை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் டி.வொய்.எஸ்.பி பைஜூ பலோஸ் என்பவரால் இந்த புகார் பதிவுசெய்யப்பட்டு, தற்போது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. இந்த எஃப்.ஐ.ஆரில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல் பின்வருவமாறு.. “இந்த வழக்கை விசாரிக்கும் அஞ்சு பேரும் இதற்கான பலனை அனுபவிப்பாங்க” என சொன்ன திலீப் அதற்காக திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோஜன், சுதர்ஷன், சந்தியா, பைஜு பாலோஸ், ஏவி ஜார்ஜ் ஆகியவர்களே அந்த ஐந்து அதிகாரிகளாக அறியப்படும் அறியப்படுகிறார்கள்
இந்த ஐந்து பேர் அடங்கிய விசாரணைக் குழு மூன்றாகப் பிரிந்து இப்போது வெவ்வேறு கோணங்களில் இவ்வழக்கை விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளை மேற்பார்வையிட்டு வழிநடத்தும் ஏடிஜிபி ஸ்ரீஜித், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த விசாரணைகள் நேர்மையாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.
திலீப்பின் நெருங்கிய நண்பரான பாலசந்திரா என்பவர் வாக்குமூலங்களை அளித்ததன் அடிப்படையிலேயே காவல்துறை இவ்வழக்கை பதிந்துள்ளது. பெண் நடிகரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ க்ளிப்புகளை திலீப் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் பாலசந்திரா, “பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை சூப்பரண்ட் ஏவி கணேஷின் வீடியோ யூ ட்யூபில் பார்த்த திலீப், தன்னை கைது செய்த சுதர்ஷனின் கையை வெட்டுவேன் என்றார்” எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் திலீப் மீதும், அவரது தம்பி மற்றும் உறவினர்கள் மீதும் பதியப்பட்டிருக்கும் இந்த வழக்கு விசாரணை இப்போது தீவிரமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மலையாள நடிகர், “இவ்வழக்கில் எனக்கு நீதி வேண்டும் எனவும், அதிகாரிகள் மிரட்டப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாவதும் மிகுந்த கவலையைத் தருகிறது” எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் நடிகர் இதைக்குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில், “இது எளிய பயணமல்ல. பாதிக்கப்பட்டவள் என்னும் முத்திரையில் இருந்து நகர்ந்து போராடி வாழ்பவள் என்னும் கட்டத்தை அடைந்திருக்கிறேன். நீதி ஜெயிப்பதும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதும் முக்கியமானது. வேறு யாருக்கும் இப்படி ஒரு அநீதி இழைக்கப்படக்கூடாது. அது வரை நான் இந்த பயணத்தை நிறுத்தப்போவதில்லை” என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் நடிகர், Women in Cinema Collective (WCC) என்னும் மலையாள பெண் நடிகர்களின் அமைப்பின் அக்கவுண்ட் வழியாகத்தான் தனது முந்தைய அறிக்கைகளை வெளியிட்டார். முதன்முறையாக தனது கணக்கிலிருந்தே இந்த செய்தியைப் பதிவிட்டிருக்கிறார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்