தஷ்வந்த்தை ஞாபகம் இருக்கிறதா ? கொடூர கொலையாளி விடுதலை.. பிறழ்சாட்சியாய் மாறிய தந்தை
Dhasvanth case: தாயை கொலை செய்த வழக்கிலிருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூர், அடுத்த மாங்காடு அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு, 6 வயது பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்த, கொலையாளி தஷ்வந்த் பெயரை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு மறந்திருக்காது. தஷ்வந்த் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தக் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்தது தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது. குறிப்பாக அந்த சிறுமியின் பெற்றோர், கதறி அழுத காட்சிகள் பொதுமக்களை உலுக்கியிருந்தது.
தாயைக் கொலை செய்த தஷ்வந்த் ?
சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், நிபந்தனை ஜாமீனில் தஷ்வந்த் வெளியே வந்திருந்தார். இதையடுத்து குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தஷ்வந்த், அவரது தாய் சரளாவை கம்பியால், தாக்கி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவானதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அவரைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தமிழக காவல்துறையினர் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது தஷ்வந்த் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன ?
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம், தஷ்வந்த்துக்கு, 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இது தவிர, 363 பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 366 கீழ் 10 ஆண்டுகளும், 354-பி பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 201 கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான போஸ்கோ சட்டத்தின் 6- வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும் 8-வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீடு செய்த தஷ்வந்த்
முதலில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தஷ்வந்த், முதலில் தனக்கு தண்டனை கொடுத்து விடுங்கள் என தஷ்வந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து நீதிபதிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் முடிவில், தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி, தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தூக்கு தண்டனை என்பதாலே விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும், இந்த வழக்கு ஆயுள் தண்டனையாக இருந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என அப்போதே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தூக்கு தண்டனைக்கு மட்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தாயை கொலை செய்த வழக்கு ?
தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால் , தஷ்வந்தின் தாய் கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டுள்ளார்.





















