வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்.. தாய், 2 குழந்தைகள் சடலமாக மீட்பு - ஆபத்தான நிலையில் கணவர்
காரிமங்கலம் அருகே வீட்டுக்குள் தாய், இரண்டு குழந்தைகள் உடல் துர்நாற்றம் வீசி, அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு-கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன் (35) ஆட்டோ டிரைவர். சிவனுக்கும் தனது அக்கா மகள் நந்தினி (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு அபி(6), தர்ஷன்(4) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நந்தினி அருகில் மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். மேலும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ள உறவினர்கள் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை சிவன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு, ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது சிவனின மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடய அறிவியல் துறையினரை வரவழைத்தனர். மேலும் உள்பக்கம் பூட்டிய வீட்டை உடைத்து பார்த்த பொழுது சிவன் உயிருடன் இருந்துள்ளார். சிவனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் இருந்துள்ளனர். தொடர்ந்து சிவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூவரின் உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என தடயங்களை சேகரித்தனர். இதனை தொடர்ந்து மூன்று சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் வீட்டை சோதனை செய்து பார்த்ததில், தட்டில் சாப்பாடு, இரண்டு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் அருகில் இருந்ததால், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் சிவன் கடந்த 28ஆம் தேதி வெளியில் வந்ததை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். அதன் பிறகு சிவன் மற்றும் அவரது மனைவி நந்தினி குழந்தைகள் யாரையும் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்தவர்கள் உடல் துர்நாற்றம் வீசிகிறது. ஆனால் சிவன் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனால் சிவன், மனைவி மற்றும் குழந்தைகளை மருந்து கொடுத்துக் கொன்றிருக்கலாம் அல்லது அடித்து கொலை செய்திருக்கலாம். மேலும் தான் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தால், ஓரிரு நாள் கழித்து, தான் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்ற சந்தேகமும் காவல் துறையினருக்கு எழுந்துள்ளது. ஆனால் சிவன் உயிர் பிழைத்தால் மட்டுமே இதற்கான மர்ம முடிச்சு அவிழும். இந்த சம்பவத்தால், காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.