Cyber Crime: அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்; ஆசை வார்த்தை காட்டி மோசடி - போலீஸ் எச்சரிக்கை
கடந்த 2023ம் ஆண்டு 3,74,93,024 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் 4,82,30,197 முடக்கபட்டது. ரூ.18,03,022 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம்
சைபர் கிரைம்கள் ஒரு பெரிய ஆபத்தாக கருதப்படுகின்றன, ஏனெனில் அவை நிதி இழப்புகள், முக்கியமான தரவு மீறல்கள், அமைப்புகளின் தோல்வி போன்ற பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது ஒரு நிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கும். சைபர் கிரைம் என்பது எந்தவொரு சட்டவிரோத செயலைச் செய்வதற்கு அல்லது எளிதாக்குவதற்கு எந்தவொரு தகவல் தொடர்பு சாதனத்தையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் என்று வரையறுக்கலாம். சைபர் கிரைம் என்பது ஒரு கணினி அல்லது கணினியின் குழுவை ஒரு நெட்வொர்க்கின் கீழ் தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக குறிவைக்கும் அல்லது பயன்படுத்தும் ஒரு வகை குற்றமாக விளக்கப்படுகிறது. கணினிகள் மற்றும் கணினி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி சைபர் குற்றங்கள் செய்யப்படுகின்றன.
டிஜிட்டல் பணபரிமாற்றம்
வாட்ஸ் அப், பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என்று இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வெகு சுலபமாக ஒருவரை அடையாளம் கண்டு அவர்களை வெகு சுலபமாக வீழ்த்தி யூபிஐ மூலம் அத்தியாவசிய, அவசிய தேவைகளுக்கு கூட இப்போது டிஜிட்டல் பணபரிமாற்றம் மூலம் நடைபெறும் மோசடிகள் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. ஒரு ரூபாய் பணத்தை கூட ஆன்லைனில் அனுப்புவது சகஜமாகிவிட்டது. இப்படி தொழில் நுட்பம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றாலும் இதனால் ஏற்படுவது வேதனைகள் தான் என்றால் மிகையில்லை. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஈடாக சைபர் க்ரைம் செயல்பாடுகளை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
அதிக லாபம், ஆசைவார்த்தை...
பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவற்றை வைத்து கிராமப்புறத்தில் சிறிய அளவில் கடை வைத்துள்ளவர்களிடம் பணம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த இளைஞரிடம் ரூ 69 லட்சம் மோசடி நடந்துள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் பண ஆசைக்காட்டி நடைபெறும் மோசடிக்கு எல்லையே இல்லை. பெரும்பாலும் பரிசு விழுந்ததாக கூறி அதை அனுப்ப ஜி எஸ் டி தொகையை கட்டுமாறு வலைவீசி அதில் சிக்குபவர்களிடம் தவணை தவணையாக வசூலிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,
ஆன்லைன் செயலி மூலம் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி, டாஸ்க் முடித்தால் அதிக பணம், பிட் காயினில் அதிக வருமானம் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் மெசேஜ் அனுப்பி வருவதால், உங்களது வங்கி கணக்கு எண் ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்ககூடாது. இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும்.
ஆசை வார்த்தை காட்டி மோசடி
எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். இப்படி கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு, பிட்காயின் என்று வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொண்ட மொபைல் எண், பண பரிமாற்றம் நடந்த வங்கி கணக்குகள் போன்ற வற்றை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். சமூக வலைதளங்களில் தங்களைப்பற்றிய விவரங்களை வெளியிடும் போது அதனை வைத்து கிராமப்புறங்களில் சற்று வசதியாக உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் ஹேக்கர்ஸ்களுக்கு தெரிகிறது. அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்க மாக அறிந்து கொண்டு ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட புள்ளிவிவரம்
கடந்த 2021ம் ஆண்டு ரூ1,49,30,916மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் ரூ 21,26,305 முடப்பட்டது. ரூ 5,40,813 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு ரூ 2,33,87,661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் 1,46,68,038 முடப்பட்டது. 20,06,013 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 3,74,93,024 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் 4,82,30,197 முடக்கபட்டது. ரூ 18,03,022 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்காண்டு மோசடி தொகை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடியும். இந்த புள்ளிவிவரம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமே. தமிழகத்தை காட்டிலும் தற்போது புதுச்சேரியில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.