விருத்தாச்சலம் அருகே பட்டபகலில் திருமணத்திற்காக வைத்திருந்த 110 சவரன் நகை கொள்ளை
தனலட்சுமி வீட்டின் முன்பு சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் தனலட்சுமியின் உறவினர்கள் என நினைத்து அவர்களிடம் விசாரிக்காமல் விட்டுவிட்டனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 3 மகள்களும், விக்னேஷ் (27) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சின்னதுரை இறந்துவிட்டார். தனலட்சுமி முந்திரி விவசாயம் செய்து வருகிறார். சுதா, ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து ஜெயலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க தனலட்சுமி ஏற்பாடு செய்து வந்தார்.
ஜெயலட்சுமி தனியார் வேளாண்மை கல்லூரியில் துணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இதையடுத்து தனலட்சுமி, விக்னேஷ் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு முந்திரிக்கொட்டை எடுப்பதற்காக தங்களது விவசாய நிலத்திற்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் மதியம் 1 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு அறையின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 110 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. பின்னர் இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தனலட்சுமி தனது மகள் ஜெயலட்சுமி திருமணத்திற்காக ரூ.41 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை சேர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் விவசாய நிலத்துக்கு தனலட்சுமி தனது மகனுடன் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தனலட்சுமி வீட்டின் முன்பு சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் தனலட்சுமியின் உறவினர்கள் என நினைத்து அவர்களிடம் விசாரிக்காமல் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் விட்டுவிட்டனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், இதில் அந்த வாலிபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்து வருகின்றனர். அதன்அடிப்படையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வருகின்றனர்.