Crime; வேலூரில் திமுக கவுன்சிலர்கள் மோதல்; மருத்துவனையில் அனுமதி- வைரலான வீடியோ காட்சிகள்!
வேலூரில் திமுக கவுன்சிலரை தாக்கிய சக திமுக கவுன்சிலர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 ஆவது வார்டு கவுன்சிலர் சுதாகர். வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24ஆவது வார்டு திமுக கவுன்சிலராக சுதாகர், உள்ளார். இவருக்கு சொந்தமாக புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஓட்டலில் சுதாகர் நுழைவு வாயிலில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது 30-வது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சுமார் 10க்கும் மேற்பட்டோருடன் சென்று, கவுன்சிலர் சுதாகரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுதாகருக்கு பல் உடைந்து, காயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூரில், ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் லாட்ஜுக்குள் புகுந்து, அதே கட்சியைச் சார்ந்த மற்றொரு கவுன்சிலரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மோதல் குறித்து திமுக வட்டாரத்தில் பேசுகையில்; ‘தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30-வது வார்டு கவுன்சிலர் முருகன், திமுக கட்சியில் அப்பகுதி வட்டச் செயலாளர், மாவட்ட பிரதிநிதியாகவும் கட்சிப் பதவிகளில் உள்ளார். வேலூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயனின் தீவிர விசுவாசியாக உள்ளதாக காட்டிக்கொள்கிறார். இதையெல்லாம் தாண்டி, அவர் ‘கந்து வட்டி’ தொழிலை முழுநேரமாக செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முருகனிடம் இருந்து சரவணன் என்பவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த சரவணன், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகரின் நண்பர். அசல், வட்டித் தொகையை திருப்பித் தருவதில் சரவணன் காலதாமதம் செய்திருக்கிறார். கடனை அடைக்க, முருகனிடம் பேசி கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தருமாறு, சுதாகரை கேட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுதாகர், இதுதொடர்பாக முருகனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த முருகன் 10-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக்கொண்டு வந்து, சுதாகரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், அவருக்கு பல் உடைந்து காயம் அடைந்துள்ளார். புகாராக இந்த விவகாரம் இன்னமும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. அதேசமயம், பாதிக்கப்பட்ட தரப்பு கவுன்சிலர் புகாரளிக்கும் பட்சத்தில், அதன் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க எதிர்தரப்பு கவுன்சிலருக்கு ஆதரவாக ஆளும்கட்சி முக்கியப் புள்ளி ஒருவர், காவல்துறை உயரதிகாரியிடம் பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது’’ என்கின்றனர்.
இதுபற்றி, வேலூர் வடக்கு காவல் காவல்துறையினரிடம் பேசியபோது, ‘‘கவுன்சிலர்கள் முருகன், சுதாகர் இருவருமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கின்றனர். இருவரிடம் இருந்தும், விசாரணை நடத்தி ஸ்டேட்மென்ட் பெற்றுள்ளோம். இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னையே, இந்த மோதலுக்குக் காரணம்’’ என்று தெரிவித்தனர்.