Crime: புதுவையில் பரபரப்பு ...தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை ....!
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் - அந்தராசி குப்பம் மெயின் ரோட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு வாலிபர் கழுத்தை அறுத்தும், மார்பில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கல்மண்டபம் அருகே தமிழகப் பகுதியான அந்தராசி குப்பத்தை சேர்ந்த காமராஜ் (வயது 33) என்பதும் திருமணமாகாத இவர் கல்மண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று நள்ளிரவு பணி முடிந்து காமராஜ் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கும்பல் மது குடித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டதை காமராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் காமராஜை கத்தியால் கழுத்தை அறுத்தும் மார்பில் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. 17 வயதுக்குட்பட்ட கல்மண்டபம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்களும் வாணரப்பேட்டையை சேர்ந்த 2 சிறுவர்களும் சேர்ந்து காமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காமராஜ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த கொலை சம்பவம் புதுச்சேரியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.





















