Crime: சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..! விடுதி அறையில் தூக்கில் தொங்கிய சோகம்..! என்ன காரணம்...?
சென்னையில் ஐஐடி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Crime : சென்னையில் ஐஐடி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கும். இங்கு படித்தால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்பது தான் முக்கிய காரணமாகும். இருப்பினும் கூட இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஐ.ஐ.டி.யில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவர் தற்கொலை
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் 2ஆம் ஆண்டு பிடெக் படிப்பை படித்து வந்தவர் கேதார் சுரேஷ். இவர் விடுதியில் தங்கி படிப்பை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று விடுதி அறையில் கேதார் சுரேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார் விடுதி அறைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கேதார் சுரேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் தற்கொலை?
மாணவர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுதியில் அவருடன் தங்கி இருந்தவர்கள், விடுதி காப்பாளரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே அவரது தற்கொலைக்கான முழுக் காரணம் தெரியவரும். மேலும், கேதார் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ரீவன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி, சென்னை ஐஐடி கல்லூரி விடுதியில் தங்கி முதுநிலை ஆராய்ச்சி 2 ஆம் ஆண்டு படிப்பைப் படித்து வந்துள்ளார். மாணவர் ஸ்ரீவன் சன்னி படிப்பில் சிறந்து விளங்கியவராக இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)