Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு
ஆரணி அருகே காவலரை மது போதையில் தாக்கிய 3 ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
![Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு Crime Army soldiers who assaulted a constable under the influence of alcohol Case in 4 sections Confinement in Vellore Jail TNN Crime: மதுபோதையில் காவலரை நையப் புடைத்த ராணுவ வீரர்கள் சிறையில் அடைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/99ae9df5299c3ffed26559c098dfd0e21684201900102187_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த , கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாராயம் அதிக அளவில் காய்ச்சி விற்பனை செய்வதாக கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து கண்ணமங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான காவல்துறையினர், சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்ணமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் படவேடு சாலையிலுள்ள குப்பம் கிராமத்தில் நான்குபேர் குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளை செய்வதாக அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் முதல்நிலைக் காவலர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று நான்குபேரையும் கண்டித்து வீட்டுக்குச்செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
அப்போது தலைக்கு மீறிய போதையில் நான்கு நபர்களும் இருந்ததால், அறிவுரை வழங்கிய காவலரிடம் ‘நாங்கள் யார் தெரியுமா, ராணுவ வீரர்கள். எங்களையே அதட்டுகிறாயா?’ என்று மிரட்டியுள்ளனர். அதற்கு காவலர் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, குடித்து விட்டு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவது தவறானது எனக் கூறியுள்ளார். அதற்கு ராணுவ வீரர்கள் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக காவலர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். காவலர் தாக்கப்பட்ட தகவலறிந்தவுடன் துணை ஆய்வாளர் கார்த்தி தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று போதையில் இருந்த ராணுவ வீரர்கள் நான்குபேரையும் காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பழனி, அய்யப்பன், முருகன் மற்றும் இவர்களின் உறவினர் சரவணன் எனத் தெரியவந்தது. சரவணனை தவிர மற்ற மூவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதும், குலதெய்வ கோயில் திருவிழாவையொட்டி விடுமுறை எடுத்துகொண்டு ஊருக்கு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இருந்தபோதும், காவலரை தாக்கிய புகாரில் நான்குபேர் மீதும் கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் மற்றும் அவருடைய உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நான்கு பேரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மூன்று ராணுவ வீரர்கள் சிறையிலடைக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள் போதையில் ரகளை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)