வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம்..? - பெற்றோர் குற்றச்சாட்டு
வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 மாத குழந்தை உயிரிழப்பு. உறவினர்கள் சாலை மறியல்.
![வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம்..? - பெற்றோர் குற்றச்சாட்டு crime A 6-month-old child died without treatment at Vandavasi Government Hospital TNN வந்தவாசி அரசு மருத்துவமனையில் 6 மாத குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியம்..? - பெற்றோர் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/33e6944c27cbe1ddb8511f1537aef9ce1674643369362109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் வயது (35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மூசா வயது (24) இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு முகமதுரசூல் என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் 6 மாத கைக்குழந்தைக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் முகமதுரசூவை வந்தவாசி அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களாக சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் குழந்தை முகமதுரசூக்கு காய்ச்சல் மற்றும் சளி திடீரென அதிகமாகியது. இதனால் குழந்தையால் பால் குடிக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளதாகவும், அதன் பிறகும் குழந்தையை மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே குழந்தையால் மூச்சு விடமுடியாமல் நள்ளிரவில் திடீரென குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தை இறந்ததை அறிந்த பெற்றோர் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு அமர்ந்து நியாயம் கேட்டு 2 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச காலதாமதம் ஆனதால் இறந்த குழந்தையின் உறவினர்கள், பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு 400-க்கும் மேற்பட்டோர் குழந்தையின் உடலை வைத்து சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட மருந்துவ இணை இயக்குனர்கள், பாபு, ஏழுமலை, ஆகியோர் இறந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் குழந்தை இறப்பு குறித்த உரிய விசாரணை நடத்த வேண்டும், வந்தவாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப்பட வேண்டும், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பற்றாக்குறையை போக்க ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்றதால் சாலைமறியலை கைவிட்டனர். அதிகாலையில் இருந்து நடைபெற்ற போராட்டம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)