Thoothukudi: காற்றில் பறக்க விடப்பட்ட ஆட்சியரின் உத்தரவு.. வைக்கப்பட்ட சீல்களை அகற்றி நிலத்தடி நீர் கொள்ளை..!
வல்லநாடு வன சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வனப்பகுதியில் மரங்கள் விலங்குகள் பாதிக்கப்படுவதால் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வல்லநாடு மலைப்பகுதியில் வெளிமான் சரணாலயம் அருகே அரசு வைத்த சீலை உடைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே திருநெல்வேலி & தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வல்லநாட்டில் வெளிமான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அமைந்துள்ள மலைப்பகுதியில் கடந்த வருட கணக்கெடுப்பு படி 243 வெளிமான்கள், 47 புள்ளிமான்கள், 30 கடமான்கள் உள்ளது. மேலும் முள்ளம்பன்றி, எறும்பு தின்னி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டு முயல், மரநாய் மேலும் 86 வகையான பறவையினங்கள் வாழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பகுதியில் உள்ள மலைப்பகுதி அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினம்தோறும் 100க்கணக்கான லாரிகள் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த வல்லநாடு மலைப்பகுதி அடிவாரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இதே போல் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சுதன் கிறிஸ்டோபர் என்பவர் அளித்த புகாரின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார், இதை ஆய்வு செய்து 4 ஆழ்துளை கிணறுகளுக்கு உடனடியாக சீல் வைத்து தண்ணீர் எடுக்க தடை விதித்தார்.
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டங்கள் உள்பட தென்மாவட்டங்களில் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் சீலை அகற்றி தற்போது மீண்டும் அந்த இடத்தில் தண்ணீர் உறிஞ்சி தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் தூத்துக்குடியில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கும் இங்கிருந்து உறிஞ்சி எடுக்கும் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுதன் கிறிஸ்டோபர் கூறுகையில், ”வல்லநாடு வன சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வனப்பகுதியில் மரங்கள் விலங்குகள் பாதிக்கப்படுவதால் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு நோக்கித்திற்கு பெறப்பட்ட மின்சாரத்தை ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்படுவதால் மின்சார இணைப்பை துண்டித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் தண்ணீர் திருடி செல்லும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வைத்த சீலை உடைத்து அனுமதி இல்லாமல் தண்ணீர் திருடுவது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வைத்த சீலை உடைத்த குற்றத்திற்காகவும் மீண்டும் தண்ணீரை திருடி விற்பனை செய்யும் குற்றத்திற்காகவும் வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.